;
Athirady Tamil News

இன்றைய நெருக்கடியில் இருந்து கற்க வேண்டிய பாடம்!! (கட்டுரை)

0

நாடு அறிவிக்கப்படாத முழு முடக்கத்துக்குள் வந்துவிட்டது. பசி பட்டினிக்கான முன் அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளாந்தம் வெளியிட்டு வருகின்றார். போர் நீடித்த காலத்தில், நாட்டு மக்கள் கொண்டிருந்த பதற்றத்தைக் காட்டிலும், தற்போது மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், மிகப்பெரியதாக மாறியிருக்கின்றது. வாழ்வதற்கு தகுதியில்லாத நாடாக இலங்கை இன்று நோக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையை ஏற்படுத்திவிட்ட அரசாங்கம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு நாடுகள் என்று பல நாடுகளுக்கு, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி, கடன்களை கோரி வருகின்றது.

இன்னொரு பக்கம், ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னுடைய கடந்த கால முறையற்ற நிர்வாகத்தையே மேற்கொண்டு வருகின்றார்.

பிரதமர் பதவி மாத்திரமல்ல, நிதி அமைச்சும் இன்று ரணிலிடமே இருக்கின்றது. ஆனால், அவரை அழைக்காமல், திறைசேரியின் ஆணையாளரையும் அதிகாரிகளையும் அழைத்து, எப்படியாவது எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கடன்களைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்துமாறும், ஜனாதிபதி கோட்டா கோருகிறார்.

நாட்டின் நிதிநிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது, நிதி அமைச்சரான ரணிலை அழைக்காமல், அறிவுறுத்தல் வழங்கும் கூட்டத்தை கோட்டா நடத்துவது என்பது, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளிய பின்னரும், அவர் கற்றுக்கொண்டது மாதிரி தெரியவில்லை.

தான் தோற்றுப்போன ஜனாதிபதி என்பதை, கோட்டா ஏற்றுக்கொண்ட போதும், பதவியிலிருந்து விலகி, நாட்டின் நிர்வாகத்தை சீராக முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை, அவர் சிந்திக்கிறார் இல்லை.

ஏனெனில், ராஜபக்‌ஷர்களின் இறுதி எச்சம், ஆட்சிப்பீடத்தில் இருக்கும் வரையில், இலங்கைக்கான உதவிகளை வழங்குவதில்லை என்ற தோரணையிலேயே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல தரப்புகளும் இருக்கின்றன.

கடன்களையும் உதவித் திட்டங்களையும் பெறும்போது, ராஜபக்‌ஷர்கள் காட்டும் அடக்கத்தை, அதைத் திருப்திச் செலுத்தும் போது காட்டுவதில்லை.
மாறாக, கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான எந்தவித வாய்ப்புகளையும் ஏற்படுத்தாமல், நாட்டின் கடன் சுமையை இன்னும் இன்னும் அதிகரிப்பது சார்ந்தே அவர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.

அத்தோடு, வெளிநாடுகளிடமும் சர்வதேச அமைப்புகளிடமும் பெறப்பட்ட கடன்களில் கணிசமான பகுதியை, ராஜபக்‌ஷர்கள் ஊழல், மோசடி வழிகளால் சுருட்டிவிட்டார்கள் என்கிற உண்மை யாவரும் அறிந்தவை!

அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களின் இறுதி எச்சம் வரை அகற்றிய பின்னரே, இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து, அந்தத் தரப்புகள் சிந்திக்கின்றன. இதனை, ரணில் பிரதமராகப் பதவியேற்றது முதல், அவரிடமே வெளிப்படையாக அறிவித்தும் விட்டன.

அதனால்தான், வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசும் அனைத்துத் தருணங்களிலும், “ராஜபக்‌ஷர்களின் கடந்த கால ஆட்சிகளே, நாட்டின் இப்போதையை சீரழிவுக்குக் காரணம்” என்று ரணில் குற்றஞ்சாட்டி வருகின்றார்.

அதைவிடுத்து, நாட்டுக்கு உதவிகளையோ, கடன்களையோ கொண்டு வரும் எந்த மார்க்கங்களையும் அவரால் கண்டடைய முடியவில்லை.

கோட்டாவை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியதில் பௌத்த- சிங்கள இனவாத தரப்புகள் முதன்மை வகித்தன. அவரை, ‘பௌத்தத்தின் காவலர்’, ‘அபிவிருத்தியின் நாயகன்’, ‘பாதுகாப்பின் நம்பிக்கை’ என்றெல்லாம் அடையாளப்படுத்தின. அவரால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கூவித்திரிந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு அந்தத் தரப்புகள் எல்லாமும், “நாங்கள் பாவம் செய்துவிட்டோம்” என்று, பொது வெளியில் கதறத் தொடங்கிவிட்டன.

ராஜபக்‌ஷர்களுக்கு நாட்டை மீண்டும் வழங்கக் கோரியதன் மூலம், வரலாறுக்கும் மீள முடியாத கரும்புள்ளி, தங்களில் பதிந்துவிட்டதாக அவர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். பௌத்த பீடங்கள் தொடங்கி, இனவாதத்தை வளர்த்த அனைத்துத் தரப்புகளும், இன்றைக்கு சிங்கள மக்களுக்கு பதில் சொல்ல வேண்டி வந்திருக்கின்றது.

இன்றைக்கு எதிர்கொள்ளும் நெருக்கடி போன்று ஒன்றை, தென்னிலங்கை கடந்த 70 வருடத்தில் சந்தித்ததில்லை. சிறீமாவின் ஆட்சிக் காலத்தில், உணவுப் பொருட்களுக்காக மக்கள் வரிசையில் நின்ற வரலாறு உண்டுதான்.

ஆனால், வரிசையில் நிற்கும் போது, உணவுப்பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தது. வரிசையில் நின்றவர்கள், பொருட்கள் கிடைக்காமல் வீட்டுக்கு சென்றதில்லை.

ஆனால், ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்திவிட்ட இன்றைய சீரழிவு நாள்களில், எரிபொருட்களுக்காகவோ, சமையல் எரிவாயுவுக்கோ நாள்கணக்கில், மாதக்கணக்கில் வரிசையில் நின்றாலும், அது கிடைக்கும் என்று எந்த உத்தரவாதத்தையும் யாரிடமும் பெற்று கொள்ள முடியாது.

எரிபொருள் விநியோகத்துக்காக வரிசையில் நின்றவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கும் முறையை அறிமுகப்படுத்தி, அதை பொலிஸ், இராணுவத்தினரைக் கொண்டு நடைமுறைப்படுத்திய மறுநாள், எரிபொருள் விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியிருக்கின்றது.

வரிசையில் நின்றவர்கள், வீழ்ந்து இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும் நாடாக, தற்போது இலங்கை பதிவாகி வகின்றது.

இவ்வளவு சீரழிவின் பின்னரும், பௌத்த பேரினவாதப் பேச்சைப் பேசினால், தப்பித்துக் கொள்ளலாம் என்று சரத் வீரசேகர போன்ற முன்னாள் அமைச்சர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வயிற்றுப்பசிக்கு முன்னால், இந்த இனவாதப் பேச்செல்லாம் எடுபடாது என்று, சரத் வீரசேகரவுக்கு நடுவீதியில் வைத்து சிங்கள மக்கள் போதித்திருக்கிறார்கள்.

அதுவும், அவரை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டும் அளவுக்கான கோபம் எல்லாம், மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்றால், இனவாதம் பேசி ஆட்சிக்கு வந்து அலைக்கழித்தவர்கள் மீது, மக்கள் என்ன மாதிரியான வெறுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய கிழக்கு நாடுகளின் உதவியில் இயங்கிய உள்நாட்டு அமைப்புகளைத் தடை செய்யவும், நெருக்கடி வழங்கவும் தொடங்கியது. சில அமைப்புகளை இஸ்லாமிய தீவிரவாத இயங்கங்கள் என்ற அடையாளம் வழங்கி, சிலரைக் கைது செய்யவும் செய்தது. குறிப்பாக, கட்டாரின் உதவித் திட்டத்தில் இயங்கிய உள்நாட்டு அமைப்புகளை அதிகமாகவே அலைக்கழிக்கும் வேலைகளில் ராஜபக்‌ஷர்கள் இயங்கினார்கள்.

ஆனால், இன்றைக்கு எரிபொருளுக்கான கடன் உதவிக்காக, கட்டாரிடம் எரிபொருள் அமைச்சரான காஞ்சன விஜயசேகர சென்றிருக்கின்றார். தனக்குத் துணையாக, முஸ்லிம் அமைச்சர் என்பதற்காகவே சுற்றாடல் அமைச்சரான நஸீர் அஹமட்டையும் அவர் அழைத்துச் சென்றிருக்கின்றார்.

ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்ததும், அலி சப்ரி என்கிற ராஜபக்‌ஷர்களின் விசுவாசியைத் தவிர, எந்த முஸ்லிமையும் அமைச்சரவைக்குள் இணைத்துக் கொள்ளவில்லை. ஏன், பிரதி அமைச்சுப் பதவி கூட வழங்கவில்லை.

முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தீவிரவாதிகள் போன்ற தோரணையிலேயே தென் இலங்கை பூராவும் காட்சிப்படுத்தியும் வந்தனர்.

ஆனால், நாட்டை சீரழித்து முடித்த பின்னர், நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் கையேந்துவது குறித்து, எந்த வெட்கத்தையும் அவர்கள் படவில்லை. நாட்டிலுள்ள முஸ்லிம்களையும் அவர்களின் மார்க்க வழிமுறையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பௌத்த சிங்கள பேரினவாத அடக்குமுறை புரிந்த ராஜபக்‌ஷர்களுக்கும், அவர்களின் விசுவாசிகளுக்கும், இன்றைக்கு மத்திய கிழக்கு நாடுகள் இனிக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால், மத்திய கிழக்கு நாடுகள் ராஜபக்‌ஷர்களின் கடந்த கால ஆட்சியைக் கருத்தில் கொண்டு, உதவி வழங்குவது குறித்து நிறையவே சிந்திக்கின்றன.

நாட்டு மக்கள், குறிப்பாக தென் இலங்கை மக்கள், இன்றைய நெருக்கடியில் இருந்து படித்துக் கொள்வதற்கு பல செய்திகள் உண்டு. அதில், பிரதானமானது, இனவாத மதவாத சிந்தனை கொண்ட அரசியலை புறந்தள்ள வேண்டியதன் அவசியமாகும்.

இல்லையென்றால், காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெறும்போது, ஆசியாவின் முதன்மை நாடுகளில் பட்டியலில் இருந்த இலங்கை, இன்று எப்படி இனவாத அரசியலால் சீரழிந்திருக்கின்றதோ, இதைவிட இன்னும் படுமோசமாக சீரழிந்துவிடும்.

அப்போது, இந்த நாடு, யாருக்கும் வேண்டாத, எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு நாடாக மாறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.