;
Athirady Tamil News

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 09: உலக அரங்கு 2023: அதிவலதின் எழுச்சிக்கு வழியமைக்குமா? (கட்டுரை)

0

புதிய ஆண்டு நம்பிக்கையுடன் பிறக்கிறது. 2022ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் அதிர்ச்சியடையும் வகையில் சேதமடைந்தன. பெரும் வல்லரசுகளுக்கு இடையே (அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்), உலக முதலாளித்துவம் சில காலமாக மோதல்களை உருவாக்கி வருகிறது, ஏனெனில், இவற்றுக்கு இடையிலான உறவு முறிந்துள்ளது.

அமெரிக்க முதலாளித்துவமும் அதன் பேரரசும் வீழ்ச்சியடைந்து வருவது, இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஓர் அமெரிக்க நட்பு நாடாக ஐரோப்பாவின் பங்கானது, அதன் பொருளாதார எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையால் அபாயகரமானதாக மாறியது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யாவுடனான சீனாவின் ஆழமான கூட்டணியும் அதன் வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதாரமும், அமெரிக்காவில் பலரை பயமுறுத்தியது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் ஆக்ரோஷமான போட்டி, வர்த்தகப் போர்கள், தடைகள், மானியங்கள் ஆகியவை பெரும்பாலும் அமெரிக்காவால் தொடங்கப்பட்டவை. கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரப் போர் உச்சத்தை எட்டியது.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர், இதற்கான முக்கியமான காரணமல்ல; உக்ரேனிய மக்களினதும் மோதலின் இரு தரப்பிலும் உள்ள வீரர்களின் பாரிய துன்பங்களைத் தவிர, இது இரண்டாம்நிலை விவகாரம்.

இந்த ஆண்டின் முக்கிய உண்மை என்னவென்றால், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போர், தடைகள், எதிர்த்தடைகள் என்பனவாகும். இவற்றின் துணை விளைவுகள் (ஆற்றல் விலை உயர்வுகள், விநியோகச் சங்கிலித் தடைகள், பாரிய சந்தை மாற்றங்கள்), ஏற்கெனவே பல நாடுகளைத் தொந்தரவு செய்யும் பணவீக்கத்தை மோசமாக்கின.

இவை, மத்திய வங்கிகளின் வட்டி விகித அதிகரிப்பைத் தூண்டிவிட்டன. இது ஏற்கெனவே சிக்கலான 2022ஆம் ஆண்டின் உலகப் பொருளாதாரத்துக்கு அதிக இடையூறுகளையும் அதிர்ச்சிகளையும் கொண்டுவந்து சேர்த்தது.

பல தசாப்தங்களாக, செல்வமும் வருமானமும் மேல்நோக்கி மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த மறுபங்கீட்டினால் பாதிக்கப்பட்ட தொழிலாள வர்க்கங்களின் குறைந்தபட்ச எதிர்ப்புடன் இது தொடர்ந்து அதிகரித்தது.

2022ஆம் ஆண்டில், பல நாடுகளில் உள்ள உழைக்கும் வர்க்கங்கள், அந்த மறுபங்கீட்டின் பின்னணியில் தங்கள் தேவைகளை ஒத்திவைக்க தயாராக இல்லை. தொழிலாளர் போர்க்குணம், தொழிற்சங்கமயமாக்கல், வேலைநிறுத்தங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தற்கால முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகள், உறுதியற்ற தன்மைகள், நீண்ட காலமாக மந்தமான மத்திய-இடது மற்றும் மத்திய-வலது அரசாங்கங்களும் கட்சிகளும் அநீதிகளைப் போக்குவதற்கு எதையும் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க, தொழிலாளர்கள் தயாராக இல்லை.

முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெருகியுள்ள நிலையில், அவர்கள் ஒரு பொதுநோக்கத்துக்கான கூட்டணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். பூகோள அரசியலில் ‘குளோபல் சவுத்’ என்று தவறுதலாக அழைக்கப்படுகின்ற மூன்றாமுலக நாடுகள், ஒரு முக்கிய பங்காளியாக உருவாகியுள்ளன. பழைய முதலாளித்துவ உலகம், சிதைந்து கொண்டிருக்கிறது என்ற பரவலான உணர்வுகளும் தீவிரமடைந்துள்ளன. இவ்விரண்டையும் அனுமதிக்க மேற்குலகம் தயாராக இல்லை.

பாரிய முரண்பாடுகளின் போது, இரண்டுவிதமான உணர்வுகள் மக்களிடமிருந்து வெளிவருகின்றன. ஒன்றில் அது வெள்ளை மேலாதிக்கம், நிறவெறி, அதிவலதுக்கான கட்டற்ற ஆதரவு அல்லது பாசிச எதிர்ப்பு. மற்றையதில், தொழிலாளர் ஆதரவு, இடதுசாரிக் கொள்கைகளுக்கான வரவேற்பு போன்றவையாகும். இவை இரண்டையும் கடந்தாண்டு கண்டோம்.

ஒருபுறம் ஜேர்மனியில், இத்தாலியில், பிரான்ஸில் என அதிகரித்துள்ள அதிவலதின் செல்வாக்கு. மறுபுறம் பிரித்தானியாவில், சீனாவில் என உலகெங்கும் நியாயமான ஊதியம், வேலை நிலைமைகளைக் கோருகின்ற தொழிலாளர் போராட்டங்கள்.

இன்று முதலாளித்துவம், தங்கள் நெருக்கடியைச் சமாளிக்க மறைமுகமான அதிவலது ஆதரவைக் கையில் எடுக்கிறார்கள். அதன்மூலம், முதலாளித்துவங்கள் மீண்டும் தேசியவாதத்தில் தங்களை மறைத்துக் கொள்கின்றன. அதிவலது ஒருபுறம் தேசியவாத உசுப்பேத்தல்களுக்குப் பயன்படுகிறது. மறுபுறம், தொழிலாளர் போராட்டங்களை வன்முறையுடன் அடக்க உதவுகிறது.

இங்கு மூன்று போக்குகள் நோக்கப்பட வேண்டும்:

உக்ரேனிய சுயநிர்ணயம் என்பதன் பெயரால், நேட்டோ விரிவாக்கத்துக்கான பணிகள் நடக்கின்றன. உக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவு ஆயுத வியாபாரம், நீண்டகாலநோக்கில் உக்ரேனிய விளைநிலங்களைக் கைப்பற்றுதல், அமெரிக்க எரிவாயுவை, ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலீடாக்குதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டது.

சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ள அமெரிக்க முதலாளித்துவம், புதிய தாராளமய உலகமயமாக்கலில் இருந்து அரசாங்கத்தின் தலைமையிலான பொருளாதார தேசியவாதத்துக்கு மாறியது. இதற்குத் ‘தேசிய பாதுகாப்பு’ என்ற கவசத்தை இடுகிறது. இதன்மூலம், தேவைக்கேற்ப முதலாளித்துவ வரையறைகள் மீண்டும் எழுதப்படுகின்றன.

ஐரோப்பாவின் ஒற்றுமையின் முறிவு, அதிகரித்துள்ள முரண்பாடுகளும் ஓர் அரசியல்-பொருளாதாரக் கூட்டமைப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன. இவ்வொன்றியம் வலுவிழப்பது அமெரிக்க நலன்களுக்கு வாய்ப்பானது. பொதுவான வர்த்த உடன்படிக்கையால், அமெரிக்கா இழப்பது அதிகம். இதுவே, தனித்தனியானதாக இருக்கும் போது, அமெரிக்கா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு வாய்ப்பான வகையில் வர்த்தகம் செய்யவியலும்.

ஐரோப்பிய ஒன்றியம் அதற்குத் தடையாகவுள்ளது. இவ்வொன்றியத்துக்கு மாற்றாக அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய-நேட்டோ கூட்டணி என்ற பெயரில் நேட்டோ கூட்டணியாக, ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்ற அமெரிக்கா முனைகிறது. அதனூடு அதற்கான தலைமைப் பதவியை அமெரிக்கா தக்கவைக்கவியலும். இதனூடு சரிகின்ற தன் பேரரசைக் காப்பாற்ற அமெரிக்கா முயல்கிறது.

உலக முதலாளித்துவம், இந்தப் புதிய நூற்றாண்டில் ஏற்கெனவே மூன்று முறை மோசமாகத் தடுமாறியிருக்கிறது. 2000இல் ‘டொட்-கொம்’ நெருக்கடி, 2008இல் ‘சப்பிரைம் அடமான’ நெருக்கடி, 2020இல் கொவிட்-19 நெருக்கடி என்பவையாகும்.

இந்த ஒவ்வொரு நெருக்கடியையும், வெவ்வேறு, ஒத்திசைவான பெயரால் அழைப்பதானது, ஒரு சுழற்சியை மெல்லியதாக மறைக்கிறது. ஆனால் மேலும் மேலும் மூன்றாமுலக நாடுகளைச் சுரண்டுவதன் மூலம், இந்நெருக்கடி தொடர்ச்சியாக ஆழமடைந்து வந்துள்ளது. இதன் பின்புலத்திலேயே, அதிவலதின் எதிர்காலம் குறித்து நோக்க வேண்டியுள்ளது.

2022இன் நிகழ்வுகள், அதிவலது செல்வாக்குப் பெற்று வருகிறது என்பதை உறுதிபடக் காட்டியுள்ளன. மேற்கு ஐரோப்பாவில் 2010இல் இருந்து பொதுவான போக்கு வலதுசாரி வன்முறை மெதுமெதுவாக அதிகரித்து வருவதை உறுதிசெய்துள்ளது. என்றாலும், தாக்குதல் எண்ணிக்கைகள், இலக்கு மற்றும் குற்றவாளி சுயவிவரங்கள் என்று வரும்போது தனிப்பட்ட நாடுகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.

முழுமையான எண்ணிக்கையில், இங்கிலாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்களுடன் ஜெர்மனி தனித்து நிற்கிறது. மக்கள்தொகை அளவை ஒப்பிடும் போது, ​​கிரீஸ் மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், குறைந்த அளவிலான வன்முறைகள் நிகழ்ந்துள்ளபோதிலும், மூன்று நோர்டிக் நாடுகளான ஸ்வீடன், நோர்வே, பின்லாந்து ஆகியவையும் ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தில் உள்ளன.

இந்த அதிகரிப்பை கடந்த ஒரு தசாப்தகாலமாக அதிகரித்து வந்துள்ள சமூகப் பொருளாதார அசமத்துவங்களுடனும் அதிவலது வன்முறையைக் தடுப்பதில் அரசுகளின் அலட்சியத்துடனும் சேர்த்து நோக்க வேண்டும்.

அதிகார மையங்களுக்குள் அதிவலதுக்குக் கணிசமான ஆதரவு உண்டு என்பதை கடந்தாண்டு நிகழ்வுகள் காட்டியுள்ளன. எனவே, இவ்வாண்டு அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி, இச்சக்திகளுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்.

​​வடக்கு, தெற்கு ஐரோப்பா இடையே அதிவலது வன்முறைகளில் தெளிவான வேறுபாடு உள்ளன. வடக்கு ஐரோப்பாவில் பெரும்பான்மையான தாக்குதல்கள் இன மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்தன. இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளில், அரசியல் எதிரிகள் – குறிப்பாக, பாசிஸ்டுகளுக்கு எதிரானவர்கள் – தீவிர வலதுசாரிகளால் தாக்கப்படுபவர்களில் மிகப் பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். மேலும் ஒழுங்கமைப்பட்ட அதிவலது வன்முறை இன்று அதிகரித்துள்ளது.

இவை தெளிவான செய்தியொன்றைத் தருகின்றன. நாடுகள் மிகப்பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அதற்கான தீர்வை இவர்கள் பின்பற்றுகின்ற முதலாளித்துவத்தால் தர இயலாது. எனவே தேசியவாதத்தைக் கையிலெடுக்கிறார்கள். அதற்கு அதிவலதைத் துணைக்கழைக்கிறார்கள்.
பழி, ஒருபுறம் குடியேற்றவாசிகள் மீதும்; மறுபுறம் இடதுசாரிகள், தொழிற்சங்கவாதிகள், முற்போக்காளர்கள் மீதும் விழுகிறது. இவர்கள் அனைவரின் மீதும் அரச துணையோடு அதிவலது தாக்குதல் தொடுக்கிறது. இதன் இன்னொரு வடிவமே, இலங்கை போன்ற நாடுகளில் அரங்கேறுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.