;
Athirady Tamil News

மறதியின் பின்னால் பதுங்க முனையும் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)

0

ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கை சட்டக் கல்லூரியில் ஜனநாயத்தைப் பற்றிய தலைப்பொன்றின் கீழ் சிறப்புரையாற்றிக் கொண்டு இருந்தார். கட்டுரையாளரும், ‘தினபதி’ நாளிதழுக்காக அந்தக் கூட்டத்தை அறிக்கையிடுவதற்காக அங்கு சென்றிருந்தார்.

அப்போது, தமிழ் முதியவர் எழுந்திருந்து, “ஐயா! நீங்கள் ஜனநாயத்தைப் பற்றி அருமையாக உரையாற்றினீர்கள். ஆனால், உங்கள் ஆட்சியின் கீழ், தமிழர்களான எமது ஜனநாயகம் பறிக்கப்பட்டதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களின் போது, உங்களது பாதுகாப்பு படையினரின் கண்முன்னேயே எனது வீடு தாக்கப்பட்டு எரிக்கப்பட்டது. எங்களுக்கு இது வரை நீதி வழங்கப்பட்வில்லை” என்றார்.

அதற்கு ஜே.ஆர் வழங்கிய பதிலோடு, சபையோர் குலுங்கிகுலுங்கி சிரிக்கலாயினர். பாரதூரமான பார்வையோடு அந்த முதியவரை நோக்கிய ஜனாதிபதி, “1983 ஆம் ஆண்டிலா…? அந்த ஆண்டில் நானா ஜனாதிபதியாக இருந்தேன்? பண்டாரநாயக்க அம்மையார் இல்லையா” என்று கேட்டதே, சபையை சிரிக்க வைத்தது.

இலங்கை வரலாற்றையே மாற்றிய 1983ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்தவருக்கு, தாம் அந்த ஆண்டில் நாட்டுக்கு தலைமை தாங்கியமை மறந்து போவதாக இருந்தால், அதனை எவ்வாறு விவரிக்கலாம்?

உண்மையிலேயே ஜே.ஆர் அதனை மறந்தாரா இல்லையா என்பதைவிட, அந்த முதியவரின் கேள்விக்கு திருப்திகரமான பதிலை வழங்க ஜே.ஆரால் முடியாது. 1983ஆம் ஆண்டு, தமிழருக்கு எதிரான தாக்குதல்களை அரசாங்கம் நினைத்திருந்தால் நிறுத்தி இருக்கலாம். இல்லாவிட்டால், அத்தாக்குதல்களை நாடெங்கிலும் பரவாதிருக்கும் வகையில் கட்டுப்படுத்தி இருக்கலாம். அந்த இரண்டையும் அரசாங்கம் செய்யவில்லை.

கலவரத்தின் நான்காவது நாளில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, தாக்குதல்களை நடத்தும் காடையர்களை சாடாது, தமிழ்த் தலைவர்களையே சாடிப் பேசினார். அதனால், ஐந்தாவது நாள் தாக்குதல்கள் மிகவும் பயங்கரமாகின.

அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள், வாக்காளர் இடாப்புகளை கையில் வைத்துக்கொண்டே, கொழும்பில் தமிழர்களின் வீடுகளை அடையாளம் கண்டு, அவற்றை தாக்கினர் என்பது பின்னர் தெரிய வந்தது. எனவே தான் ஜே.ஆர், தாம் ஜனாதிபதியாக இருந்ததையும் மறந்ததைப் போல் நடித்தார்.

தமக்கு சாதகமான முறையில், பல விடயங்களை மறந்து விடுவதை (மறந்ததைப் போல் நடிப்பதை) எப்போதும் அரசியல்வாதிகளிடம் காணலாம். 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்சினையை தீர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பர் மாதம் வரவு- செலவு திட்ட விவாதத்தின் போது கூறினார். அதன்படி, டிசெம்பர் 13ஆம் திகதி ‘சர்வ கட்சி’ கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு முன்னர், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் அந்தக் கூட்டத்தின் போது கோரின. ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால், ஜனவரி மாதம் ஆரம்பத்தில் ஜனாதிபதி பொறுப்பேற்ற விடயங்களை செய்யவில்லை என்று, தமிழ் கட்சிகள் ஒதுங்கிக்கொண்டன.

அதையடுத்து ஜனவரி 15ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவின் போது உரையாற்றிய ஜனாதிபதி, இரண்டு வருடங்களில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக கூறினார்.

சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிர்சினையை தீர்ப்பது போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவதைப் பார்க்கிலும், இது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால், சுதந்திரதினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினையை நிறைவேற்றுவதாக தாம் அளித்த வாக்குறுதியை அவர் மறந்து இருந்தார் என்பதும் அதன் மூலம் தெரிகிறது.

இப்போது, அவர் இரண்டு வருடத்தில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதென்ற வாக்குறுதியையும் மறந்துவிட்டார் போலும்! சுகததாஸ உள்ளரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் இவ்வருட மே தினக் கூட்டத்தில், ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றிய அவர், இவ்வருட இறுதியில் இனப் பிரச்சினையை தீர்க்க, உடன்பாடுகளை செய்துகொள்வதாக கூறினார். அத்தோடு அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, தமிழ்க் கட்சித் தலைவர்களை அழைத்த வண்ணமே இருக்கிறார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மறதி என்ற விடயத்தில் ஜே.ஆரையும் மிஞ்சிவிடும் போல் தெரிகிறது. கடந்த வருடம் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய காலத்தில் பதுங்கி இருந்த அவர்கள், இப்போது வெளியே வந்து மேடைகளில் நடத்தும் பேச்சுகளை கேட்கும் போது, கடந்த மூன்று வருடங்களாக தமது அரசாங்கமே நாட்டில் இருக்கிறது என்பதையும் மறந்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. தாம் பதவியில் அமர்த்திய ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் எவ்வாறு கவிழ்ந்தது என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்!

எனவே, சதிகள் மூலம் கோட்டாவின் அரசாங்கம் கவிழ்ந்ததாக பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கதைகளை கூறித் திரிகின்றனர். புலிகள் தோல்வியடைந்தது முதல், தொடர்ந்த ஒரு சதியின் விளைவாகவே கோட்டாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கூறியிருந்தார்.

அவரது அந்த உரையை அடுத்து, மஹிந்தானந்த அலுத்கமகே, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ போன்ற பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் மே தினக் கூட்டத்தின் போது, இதே கருத்தை வெளியிட்டு இருந்தனர்.

ஆனால், அவர்கள் அந்தச் சதியை விவரிக்கவில்லை. தமது முதல் உரையை அடுத்து, முகநூல் மூலமான நேரடி கலந்துரையாடல் ஒன்றின் போதும் நாமல் இந்தச் சதிக் கதையை கூறினார். ஆயினும் அவர் அப்போது, புலிகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மூன்றாம் தரப்பு என்றே குறிப்பிட்டார்.

கடந்த வருடம் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடுத்து, அந்த போராட்டத்தைப் பற்றி தமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் போராட்டக்காரர்களைப் பற்றியே தமக்கு பிரச்சினை என்றே, நாமல் கூறியிருந்தார். இப்போது அந்தப் போராட்டமே சதியாக மாறியிருக்கிறது.

இவர்கள் இப்போது தெரிவிக்கும் கருத்துகளின் படி, தமது விவசாயம் உரமின்றி அழிந்த போதும், எதிர்த்து போராட விவசாயிகள் நினைக்கவில்லை. ஏதோ ஒரு சதியின் காரணமாகவே அவர்கள் உரம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். எரிபொருட்களுக்காகவும் எரிவாயுவுக்காகவும் நாட்கணக்கிலும் மைல் கணக்கிலும் நீண்ட வரிசைகள் இருந்தும், நாளொன்றுக்கு 13 மணித்தியால மின்வெட்டு அமலாகி, தமதும் தமது பிள்ளைகளினதும் வாழ்க்கையையே சீர்குலைத்த போதிலும் மக்கள் கோபப்படவில்லை; விலைவாசி நான்கு மடங்காக உயர்ந்த போதிலும் மக்கள் அவற்றை பொருட்படுத்தவில்லை. ஒரு சதியின் காரணமாகவே அவர்கள் வீதியில் இறங்கி போராடி இருக்கிறார்கள். எவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும், இந்த அரசியல்வாதிகள் அந்த நெருக்கடி நிலையை மறந்துவிட்டார்கள்?

அந்த மக்கள் போராட்டத்துக்கு காரணமான பொருளாதார நெருக்கடி இன்னமும் தீரவில்லை. அந்த நெருக்கடியை சமாளிக்க கடந்த வருடம் அரசாங்கம், மேற்கு ஆசிய முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடிய போதிலும் எந்தவொரு நாடும் பெரிதாக உதவ முன்வரவில்லை.

அந்த நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி, கொவிட் – 19 நோயால் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரித்தமையே, அதற்குக் கரணம் என்றார். அந்தத் தகன முடிவை அப்போதைய முழு அமைச்சரவையும் எதிர்த்ததாகவும், நீரால் வைரஸ் பரவுவதில்லை என்று, உலக சுகாதார அமைப்பு கூறியிருந்த நிலையிலும், அந்த விடயத்தை ஆராய்ந்த குழுவின் உறுப்பினரான ஒரு பெண் மருத்தவ நிபுணரே அந்த முடிவில் உறுதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

கடந்த வாரம் இந்த விடயம் மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லயும் ஒரு பெண் மருத்துவ நிபுணரே அதற்குக் காரணம் என்றார். அந்த பெண் நிபுணர் இந்த விடயத்தில் பிடிவாதமாக இருந்தமை உண்மை தான். ஆனால், முழு அமைச்சரவையும் அதனை எதிர்த்ததாக அமைச்சர் சப்ரி கூறுவது உண்மையல்ல!

சமயப் போதனைகளின்படி, சுகாதார விடயங்களின் போது முடிவு எடுக்க முடியாது என்று அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆரச்சி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பலாத்கார தகனத்தை நியாயப்படுத்தினார். தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றின் போது, மஹிந்தானந்த அலுத்கமகேயும் அதனை நியாயப்படுத்தினார்.

விமல், கம்மன்பில் ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் அப்போது என்ன கூறினார்கள் என்பதை பழைய பத்திரிகைகளை புரட்டிப் பார்த்தால் விளங்கும். தாமே அவற்றை மறந்துவிட்டா அல்லது மக்கள் அவற்றை மறந்துவிட்டார்கள் என்று நினைத்தா சப்ரியும் ரம்புக்வெல்லயும் ஒரு பேராசிரியரே தகன முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்?

பொருளாதார நெருக்கடியைப் பற்றியோ அல்லது தாம் எடுத்த இனவாத முடிவுகளைப் பற்றியோ பொறுப்பை ஏற்காது, அவற்றைப் பற்றி கட்டுக்கதைகளை கூறும் அரசியல்வாதிகள் மீண்டும் அது போன்ற முடிவுகளை எடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்தவோர் உத்தரவாமும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.