;
Athirady Tamil News

சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா? (கட்டுரை)

0

இலங்கைக்குள் தங்களுடைய கால்களை நன்றாக ஊன்றிக்கொள்வதில், அண்டைய நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.

இவ்விரு நாடுகளிடமும் அரசாங்கங்கள் கடன்களை வாங்கி குவித்துள்ளமையால், அவ்விரு நாடுகளும் முன்வைக்கும் யோசனைகளுக்கு தலையசைக்க வேண்டிய நிர்ப்பந்தமே இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
சீனா பெருந்தொகை கடனை கொடுத்திருந்தாலும், அண்டைய நாடான இந்தியா, இலங்கை எப்போதெல்லாம் பாதிக்கின்றதோ, அப்போதெல்லாம் உதவி ஒத்தாசைகளை நல்கி இருக்கின்றது.

எதிர்காலங்களிலும் அவ்வாறான உதவிகளை நாம் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எப்) யை விடவும் இலங்கைக்கு இந்தியதான் அதிகம் உதவியது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகள், வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ‘விரிவாக்கப்பட்ட சுற்றுப்புறத்தை’ மேம்படுத்துவதில் மோடி அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில்தான், இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மே.22 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம். பி. டி. யூ. கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் சென் சென்க்மிம் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்காத வகையில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனி ஆகியவை கடந்த காலத்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு போதுமான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சவாலை எதிர்கொண்டன.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சு பல்வேறு உத்திகள் குறித்து ஆராய்ந்ததுடன், எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பெற்றோலிய நிறுவனங்களிடமிருந்து இலங்கைக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆராய்ந்தது.

நாட்டில் செயல்படும் விநியோக விற்பனை முகவர் வலையமைப்புகள் மூலம் பெற்றோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. அதற்கமைய, இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இங்கு, சந்தையில் நுழையும் புதிய சில்லறை விநியோகஸ்தர்களுக்கான முக்கிய நிபந்தனைகளில் , உள்நாட்டு வங்கிகளில் தங்கியிருக்காமல் அந்நியச் செலாவணித் தேவைகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும்.

அதன்படி, இந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம்,செயற்படத் தொடங்கி ஆரம்ப ஓராண்டு காலத்தில் வெளிநாட்டு மூலங்கள் மூலம் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கான அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு ஆகியவை குறித்த முன்மொழிவுகளை ஆய்வு செய்து, பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஷெல் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க பரிந்துரைத்தன.

சினோபெக் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு 45 நாட்களுக்குள் இலங்கையில் செயல்படத் தொடங்கும். இந்த செயல்முறையானது மிகவும் நிலையான மற்றும் நம்பகமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதோடு நாட்டின் வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏககாலத்தில் சீனா யுனான் மாகாணத்தின் ஆளுநர் இலங்கைக்கு வருகைதந்திருந்தார். கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தாலும், கிழக்குக்கான அவரது விஜயத்தை இந்தியா கூர்ந்து கவனத்துக்கொண்டிருந்தது.

சீனா தனது யுனான் மாகாணத்தின் ஒரு சகோதர மாகாணமாக கிழக்கு மாகாணத்தை தத்தெடுத்து அங்கு தனக்குரிய சில நகர்வுகளை அபிவிருத்தி என்ற பேரில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த விடயம் யாவரும் அறிந்ததே. அதன்பின்னணியிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

அதாவது கிழக்கு மாகாண ஆளுநர் மாற்றத்தில் இந்தியாவின் அழுத்தம் கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தியாவுக்கு நன்கு விசுவாசமானவர் செந்தில் தொண்டமான். அதனால்தான் அவர் நியமிக்கப்பட்டார் என்ற கருத்தாடல்களும் உள்ளன. எனினும், அதற்கான பதில்கள் எந்த தரப்பில் இருந்தும் கசியவில்லை.

இந்தியாவை பொருத்தவரையில், இலங்கையில் கொழும்பில் உயரஸ்தானிகராலயமும் வடக்கில், கொன்ஸூலேட் பிரிவும், கண்டியில் பிரதி உயர்ஸ்தானிகர் காரியாலயமும் உள்ளது. செந்தில் தொண்டமானை கிழக்குக்கு ஆளுநராக நியமித்தமையானது. அங்கு இந்தியாவின் உயர்ஸ்தானிகர் காரியாலயமொன்று நிறுவப்பட்டமைக்கு சமனாகும் என்றும் சில குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த அனுராதா யகம்பத் நீக்கப்பட்ட நகர்வு ஆகியவற்றுக்குப் பின்னால் இந்தோ – சீனப் போட்டி இருந்தமை தற்போது துல்லியமாக பகிரங்கமாகியுள்ளது. அதனால்தான் அவரை நீக்கிவிட்டு, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனா தனது யுனான் மாகாணத்தின் ஒரு சகோதர மாகாணமாக கிழக்கு மாகாணத்தை தத்தெடுத்து அங்கு தனக்குரிய சில நகர்வுகளை அபிவிருத்தி என்ற பேரில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த விடயம் யாவரும் அறிந்ததே.

சீனாவின் இந்த நகர்வுக்கு கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த அனுராதா யகம்பத் பலமான ஆதரவையும் அதற்குரிய நகர்வுகளையும் செய்த போது தான், இந்தியாவின் அஸ்திரம் பாய்ந்திருக்கிறது.

இந்த அஸ்திரம் இறுதியில் அனுராதா யகம்பத்தின் ஆளுநர் பதவியை கடாசியுள்ளது.

ஈழத் தமிழர்களின் தாயகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் கிழக்கு மாகாணத்தை சீனாவின் யுனான் மாகாணத்துடன் இணைக்கும் இந்த தந்திரோபாயத்தின் அடிப்படையிலும், அதன் ஓர் அங்கமாகவும் யுனானின் ஆளுநர் வாங் யூ வோ கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்தார்.

அவ்வாறாகச் சென்றவர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துடன் முக்கியமான சந்திப்புகளுக்கு நேரம் குறித்த நிலையில் தான், அவர் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

யுனான் மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண சகோதர இணைப்புக் குறித்த எதிர்ப்பு டெல்லி ஊடாக கொழும்புக்கு வந்த பின்னர், இந்த சகோதர மாகாண இணைப்பு என்ற அடிப்படையில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களையும் கிழக்கில் முன்னெடுக்க வேண்டாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் ஆளுநர் அனுராத யகம்பத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறான அறிவுறுத்தல் வந்து சில நாட்களுக்கு பின்னர் குறிப்பாக, யுனான் ஆளுநரின் இலங்கை பயணத்துடன் அனுராதா யகம்பத் பதவியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.

இதனால் கடந்த வாரம் அவருக்கும் சீன ஆளுநருக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு மீளெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் திட்டமிட்டபடி தனது குழு மற்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் சகிதம் திருகோணமலைக்குச் சென்ற யுனான் ஆளுநர் திருகோணமலை துறைமுகத்தையும், சீனன்குடா பகுதியையும் பார்வையிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த நிகழ்வுகளில் புதிய ஆளுநரான செந்தில் தொண்டமான் பிரசன்னப்படவில்லை. சீனாவை பொறுத்தவரை தனக்கும் சீனன் குடாவுக்கும் இருக்கும் வரலாற்றுத் தொடர்பின் அடிப்படையில் சில திட்டங்களை திருகோணமலையில் செய்ய ஆவல்படுகின்றது.

இந்த வியூகத்திற்கு ஏற்ற வகையில் யுனான் மாகாணத்தை கிழக்கு மாகாணத்துடன் ஒரு சகோதர மாகாணமாக இணைக்கும் தந்திரத்தை அது நகர்த்த திட்டமிட்டு இருந்தது.

சீன வரலாற்றில் இன்றுவரை மகா அட்மிரல் என வர்ணிக்கப்படும் பெரும்கடற்படைத் தளபதியாக ஜென்கே இருக்கின்றார். இந்த ஜென்கே 15ஆம் நூற்றாண்டில் யுனான் மாகாணத்தில் பிறந்தவர்.

அவரது கடற்படை பெரும் கடற்படையாக வியாபித்திருந்த காலத்தில் சீனக் கடற்கலங்கள் அடிக்கடி திருமுலையிலும் நங்கூரமிட்டிருந்தன. இதனால், தான் இன்றுவரை சீனன்குடா என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

சீனக் கடற்படைத்தளபதி ஜென்கேயின் தலைமைத்துவத்தில் சீனா 14ஆம் நூற்றாண்டில் 3500 கடற்கலங்களுடன் உலகின் மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தது. அவற்றில் சில ஐரோப்பாவால் கட்டப்பட்ட கப்பல்களை விட 5 மடங்கு பெரியதாக இருந்ததாக மேற்குலக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐரோப்பியர்கள் உலகைச் சுற்றி பல நாடுகளை கண்டு பிடிப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே சீனா உலகை சுற்றி வருவதற்கு தயாராக இருந்ததது.

ஆயினும் சீனக் கடல் வணிகர்கள் உலகைச் சுற்றி பெரும் செல்வத்தை திரட்டிக்கொண்டு வந்தால், உள்ளூரில் தமது அதிகார மையத்திற்கு வேட்டு வைத்து விடுவார்கள் என மின் வம்சம் அஞ்சியதால், அவர்களின் அரசு இந்த கடற்படை வலுவை அழித்ததாக கூறப்படுகிறது.

சீனாவிடம் இருந்த பாரிய கப்பல்களை மின் வம்ச ஆட்சியாளர்கள் அழித்ததால் சீனர்களின் கடல்வலு பின்னர் இழக்கப்பட்டுள்ளது.

ஆனால், பின்னர் மீண்டும் உலக அரங்கில் சீனா தனது பழைய கடல்வலுவை எடுக்கத் தலைப்படுவதால், ஒரு காலத்தில் அட்மிரல் ஜென்கே கடற்கலங்களை தரிக்க வைத்த இலங்கையின் சீனன் குடா மீதும் அதற்கு கண் வர இதனை இந்தியாவும் கண்ணுற்று பார்க்க, கிழக்கு ஆளுநர் அனுராதா யகம்பத் நீக்கப்பட்டு – இந்தியா தனது இரண்டாவது தாயகம் அல்லது வீடு என அடிக்கடி கூறும்,

ஆகமொத்தம் செந்தில் தொண்டமானின் இந்த ஆளுநர் தெரிவு இந்தியப் பெரியண்ணரின் ஊடாக ரணிலால் மேற்கொள்ளப்பட்ட நகர்வாகவே கூறப்படுகிறது.

செந்தில் தொண்டமானை ஆளுநராக கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்க இந்தியா பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும், தனது நியமனத்துக்கு பின்னர், சீனாவ யுனானின் ஆளுநர் வாங் யூ வோவை முதலில் வரவேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கனவை இந்தியா தகர்த்துக்கொண்டிருந்தாலும், விடாப்பிடியாக பல்வேறு திட்டங்களை சீனா முன்னெடுக்கின்றமையை கவனத்தில் கொள்வதும் அவசியமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.