;
Athirady Tamil News

தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் !! (கட்டுரை)

0

தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய முன்னைய பல பத்திகளில் இவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன்.

அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்று வரையறுக்கிறார்.

அதாவது, புறநிலையில் வைத்து ஆராயக்கூடிய விடயங்களான பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும் என்கிறார்.

மறுபுறத்தில், ஏனஸ்ட் றெனன் போன்ற அறிஞர்கள், தேசம் என்ற கருத்தியலை, அகநிலையில் அணுகும் வரைவிலக்கணங்களை முன்வைக்கிறார்கள். தேசம் என்ற கருத்தியலை வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொதுவாக்கெடுப்பாகும்” என்கிறார்.

இந்தப் புறநிலை, அகநிலை வரைவிலக்கணங்கள் பற்றி, மிக எளிமையாக எடுத்துரைப்பதானால், புறநிலை வரைவிலக்கணங்களானவை, குறித்த அம்சங்களை ஒரு மக்கள் கூட்டம் கொண்டிருக்கும் போது, அது ஒரு தனித்த தேசமாகும் என்கிறது. இங்கு அந்த மக்கள் கூட்டத்தின் மனநிலை, அதாவது அகநிலை விடயங்கள் கருத்திலெடுத்துக் கொள்ளப்படவில்லை. அதாவது அந்த மக்கள், அகநிலையில் தம்மை ஒரு தேசமாகக் கருதிக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் புறநிலை அணுகுமுறை கருத்திலெடுப்பதில்லை.

புறநிலையம்சங்கள் எப்படியிருந்தாலும், ஒரு மக்கட் கூட்டம் தன்னை ஒரு தேசமாக உணராத வரை, தேசம் என்ற எண்ணக்கரு உதிக்காது. தாம் ஒரு தேசம் என்ற ஒரு மக்கட் கூட்டத்தின் அடையாளத்தின் கரு, அடிப்படை, அஸ்திவாரம் எல்லாம் அந்த மக்கட் கூட்டம் தம்மை அவ்வாறாக உணர்வதுதான். தமிழ்த் தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல. நிற்க.

வடக்கு-கிழக்கில், தமிழ் மக்களுக்குள்ளான மத ரீதியான பிரிவினைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. ஒரு தேசத்திற்குள் மதங்கள் பல இருக்கலாம். தமிழ்த் தேசத்திற்கும், மதங்களுக்குமிடையிலான உறவு சுமுகமானதாகத்தான் பராமரித்துக்கொள்ளப்பட்டது.

இலங்கையின் பெருந்தேசியவாதம் தன்னை “இன-மதத் தேசியவாதமாக” வரையறுத்துக்கொண்ட போதும், தமிழ்த் தேசியவாதமானது தன்னை “இனத் தேசியவாதமாகவே” வரையறுத்துக்கொண்டது. அந்த வரையறையைத் தீர்மானித்ததில் பெருந்தேசியவாதத்தின் பங்கு முக்கியத்துவம் மிக்கது.

ஏனெனில் பெருந்தேசியவாதம் தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டபோது, அது “தமிழ்” என்ற அடையாளத்தை மட்டும் பார்த்ததேயன்றி, மத அடையாளத்தை கருத்திற்கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம், பெருந்தேசியவாதத்தின் மத அடையாளத்திற்கும், தமிழர்களின் மத அடையாளமும் ஒருங்கிணையும் புள்ளி, யதார்த்தத்தில் பூச்சியத்தை அண்டியிருந்தமையாகும். ஆகவே, “தமிழ்” என்ற அடையாளத்தினால் அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டதனால், அம்மக்கள் கூட்டம் அதே அடையாளத்தை முன்னிறுத்திய “தற்காப்புத் தேசியத்தை” கட்டமைத்தக்கொண்டது.

மதங்களை மேவிய “தமிழ்த் தேசம்” எனும் அடையாளம், வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அரசியல், சமூக அடையாளமானது. “தமிழ்த் தேசம்” எனும் அடையாளம் கட்டுறுதி பெறும் காலத்திலும் கூட, மதரீதியான அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதனை நிராகரித்திருந்தார்கள். “வேலா, சிலுவையா” என்ற மத ரீதியாக வாக்களிக்கக் கோரிய முழக்கம், வேல் தாங்கிய கந்தனை வணங்கும் சைவப்பெருமக்கள் நிறைந்த தேர்தல் தொகுதியில் வெற்றி காணவில்லை. அதன் பின்னர் காலவோட்டத்தில் மத ரீதியான அணுகுமுறை அடங்கிப்போனது. இதற்கு மத ரீதியிலான புரிந்துணர்வு இருந்தமையும் முக்கிய காரணம், அதேவேளை தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அணுகுமுறையும் இன்னொரு காரணம். தமிழ்த் தேசிய அரசியலில் மதம் என்பது பேசாப்பொருளானது. அது மக்களுடைய தனிப்பட்ட வாழ்வின், கலாசாரத்தின் அடையாளமாக உறுதியாக நீடித்தது. ஆனால் கடந்த அரைத் தசாப்தகாலத்தில், இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதை உணரக் கூடியதாகவுள்ளது.

மத ரீதியான பிரச்சினைகள் தமிழ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில், அதிகம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தப் பிரச்சினைகள் மற்றும் முறுகல்கள் திடீரென்று வந்தவை அல்ல. அரசியல் பரப்பில் இடம் வழங்கப்படவில்லை. ஆனால் இன்று இவை அரசியலாக மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் மிகத் தௌிவாகத் தென்படுகின்றன.

அரசியல் மையவோட்டத்தில் மத அடையாளங்கள் நுழைவதற்கான பிள்ளையார் சுழி இது. அது மட்டுமல்ல, “தமிழ்த் தேசிய” அரசியலை மீள் வரைவிலக்கணம் செய்வதற்கான முயற்சியும் கூட! சிலவேளைகளில் மீள் வரைவிலக்கணம் என்பது ஒன்றை முற்றாகச் சிதைப்பதாகவும் அமையக்கூடும். அது தான் இங்கு நோக்கம் எனலாம்.

மத ரீதியான “பிளவு” ஒரு பக்கம் நடக்கத்தொடங்கியிருக்கும் போது, மறுபுறத்தில் “சாதி” ரீதியான அரசியல் இங்கு நுழைக்கப்படுவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இலங்கைத் தமிழ் அரசியலில் சாதிக் கட்சிகள் இருந்ததில்லை. “தமிழ்த் தேசிய” அரசியலில், குறிப்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சிக்குப் பின்னர், “சாதி” ஒரு பிரச்சினைக்குரிய அம்சமாக இருந்ததில்லை. இதற்கு அர்த்தம் சமூகத்தில் சாதிகள் இல்லாதொழிந்தன என்பதல்ல. சாதிய அடக்குமுறைகள் கணிசமாகக் குறைந்தன.

ஆனால் ஆங்காங்கே சாதிய வேறுபாடுகள், பாகுபாடுகள் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவை சட்ட விரோதமான நடவடிக்கைகள். அவற்றைச் சட்டம் கொண்டே சரிப்படுத்திவிட முடியும். ஆனால், இன்று திடீரென இலங்கைக்கு சம்பந்தமே இல்லாத “தலித்தியம்” பேசிக்கொண்டு சிலர் “சாதி அரசியலை” தமிழ் மக்களிடையே முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை தமிழரிடையேயான சாதி அமைப்பு என்பது, வர்ணாச்சிரமத்தின் பாற்பட்டதல்ல. “தலித்தியம்” என்பது வர்ணாச்சிரமத்தின் அடிப்படையிலான சாதிகளின் பாற்றபட்டது. இந்திய சாதிக்கட்டமைப்பிலிருந்து, இலங்கை தமிழரிடையேயான சாதிக்கட்டமைப்பு அடிப்படையிலேயே வேறுபட்டது. இலங்கைத் தமிழரிடையே “தலித்தியம்” என்று பேசுவதே அடிப்படையில் அர்த்தமற்றது. தமிழ்த் தேசிய அரசியல் சாதி ஏற்றத்தாழ்வுகளை நிராகரிக்கும் அரசியலாகத்தான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் திடீரென்று “சாதிய” அரசியலை இங்கு நுழைக்கக் காரணம், தமிழ்த் தேசிய அரசியலை பலமிழக்கச் செய்வதற்குத்தான் என்பது தௌிவாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியத்தை “மதம்” கொண்டு பலமிழக்கச் செய்ய ஒரு தரப்பு முயல்கிறதென்றால், அதனை “சாதி” கொண்டு பலமிழக்கச் செய்ய இன்னொரு தரப்பு முயல்கிறது. ஒவ்வொரு தரப்பிற்கு ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்! இந்த “சாதிய அரசியல்” உள்நுழைப்பிற்கு, இன்று திராவிட சிந்தனையின் கட்டுப்பிடிக்குள் முழுமையாகச் சிக்கியிருக்கும் பி.பி.சி. தமிழ், இந்த “சாதிய அரசியலுக்கு” முட்டுக்கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய எண்ணம் என்பது திராவிட அரசியலுக்கு எதிரானது என்பதற்காக, அதனை தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இலங்கையிலும் இல்லாதொழித்துவிட திராவிடக் கூட்டம் முயல்கிறது போலும். மேலும் இலங்கைத் தமிழ்த் தேசியம் என்பது மத விரோதியல்ல, குறிப்பாக இந்து மத விரோதியல்ல. ஆகவே இதுகூட, தமிழ்த் தேசியத்தை தகர்ப்பதற்கு திராவிட அரசியலுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கலாம்.

எது எவ்வாறாயினும், மத ரீதியான, சாதி ரீதியான பிளவுகளும், அதை மையப்படுத்திய அரசியலும் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதொன்றல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளத் தவறினால், தமிழ்த் தேசம் என்பது சிதைந்துபோகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.