;
Athirady Tamil News

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கொவிட் கொத்தணி!!

0

அன்டீஜன் கொரோனா பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (22) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கடந்த 3 தினங்களாக கல்முனை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டு நிலைமை தளர்த்தப்பட்ட நிலையிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் கொவிட் தொற்று அதிகரித்த நிலைமையை காட்டியுள்ளது.10 தொடக்கம் 20 வீதம் வரையான கொவிட் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது.

இதனடிப்படையில் எமது கல்முனை பிராந்தியத்தில் 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.தொற்றுக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர். அத்துடன் இன்று (22) மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் கொரோனா பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் மொனராகலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். மேலும் பல இடங்களிலும் தாற்று அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை பிராந்தியத்திலும் தடிமல் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. ஆகவே எமது பரிசோதனை நடவடிக்கையிலும் கட்டுப்பாட்டு செயற்பாட்டிலும் சற்று இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

பொதுமக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்தவர்களாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதும் சுகாதார பழக்க வழக்கங்களை மிக இறுக்கமாக கடைப்பிடியுங்கள்.பல இடங்களில் சுகாதார நடைமுறைகளை மீறி பொதுமக்கள் ஒன்றுகூடுவது தொடர்பாக முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் எமது சமூகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அநேகமாக தொற்றுக்குள்ளானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களாவர். எவ்வாறாயினும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் ஊடாகவே இத்தொற்றுக்களில் இருந்து நாம் பாதுகாப்பு பெற முடியும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.