;
Athirady Tamil News

‘நிபந்தனையற்ற பொது மன்னிப்பு’ – பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

0

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து செய்தித்தாள்களில் பெரிய அளவில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டு, பதஞ்சலி நிறுவனம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது.

அந்த மன்னிப்பு விளம்பரத்தில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதை அடுத்து, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்தின் சார்பாகவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மன்னிப்பு விளம்பரத்தில், “நிபந்தனையற்ற பொது மன்னிப்பு” என்பது முன்பை விட பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த மன்னிப்பு விளம்பரத்தில், “22.11.2023 அன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறோம். எங்கள் விளம்பரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என்பதற்கு முழு மனதுடன் உறுதியளிக்கிறோம். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய கவனத்துடனும், மிகுந்த நேர்மையுடனும் கடைப்பிடிப்போம் என்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். நீதிமன்றத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்தவும், மாண்புமிகு நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கும் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி நடப்போம் என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

கொரோனாவுக்கான முதல் மருந்து என்று பொய்யான தகவல்களுடன் விளம்பரம் வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு, பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜரானார். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 10 லட்சம் ரூபாய் செலவில் 67 பத்திரிக்கைகளில் மன்னிப்புக் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் வழக்கமாக கொடுக்கும் அளவில் இல்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். அடுத்த விசாரணையின் போது, மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் வெளியான பத்திரிகையை எடுத்து வர உத்தரவிட்ட நீதிபதிகள், அவை லென்ஸ் மூலம் பார்க்கும் வகையில் உள்ளதா, இல்லை பெரிதாக உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என்று கூறினர்.

மேலும், பொய் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பிரிவு 170 ஏன் திடீரென்று நீக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இணைக்கவும், மன்னிப்பு கோரும் விளம்பரங்களை புதிதாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஏப்.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.