;
Athirady Tamil News

வெளியிடங்களில் இருந்து ஆளுநர்களை இறக்குமதி செய்வதனால் தான் சர்வதிகார போக்கு நிகழ்கின்றது!! (வீடியோ)

0

வடக்கு ஆளுநரின் சர்வதிகார போக்கினை கண்டிப்பதுடன் உடனடியாக ஆளுநரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க பொது ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் சனிக்கிழமை (30) மாலை ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

வட கிழக்கு மாகாணங்களின் 3 அமைச்சு செயலாளர்கள் அதிரடியாக கௌரவ ஆளுநரினால் இட சர்வதிகார போக்கில் மாற்றப்பட்டமை யாவரும் அறிந்ததே.இந்த இடமாற்றத்தை எமது தொழிற்சங்கமானது கண்டிக்கின்றது.ஆளுநர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகத்தினால் அரச நிர்வாக நடைமுறையை குழப்புகின்றார்.ஆளுநரை தட்டிக்கேட்பதற்கு ஆட்கள் இல்லை என்ற காரணத்தினால் தான் அமைச்சுக்களின் செயலாளர்களை தற்போது இடமாற்றியுள்ளார்.நாங்கள் அமைதியாக இருப்பதனால் தான் ஆளுநரினால் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது தொழிற்சங்கத்தை பொறுத்தவரையில் வடகிழக்கில் இருந்த முன்னாள் ஆளுநர்களுடன் மோதி இருக்கின்றோம்.ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எமது தொழிற்சங்கமானது அதனை தட்டி கேட்டிருக்கின்றது.எமது தொழிற்சங்கமானது அமைதியாக உள்ளதாக தற்போதைய ஆளுநர்கள் நினைக்கின்றார்கள்.காலத்தின் தேவைக்கேற்ப தான் எமது தொழிற் சங்கமானது குரல் கொடுக்கும்.எனவே தான் வட கிழக்கில் சிறந்த முகாமைத்துவம் உள்ள ஆளுநர்கள் தான் தேவையாக உள்ளது என்பது தான் எமது தொழிற்சங்கத்தின் நோக்கம்.

வெளி இடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஆளுநர்கள் தான் வட கிழக்கு மாகாணத்தை நிர்வகித்தனர்.இவ்வாறு வெளியிடங்களில் இருந்து ஆளுநர்களை இறக்குமதி செய்வதனால் தான் சர்வதிகார போக்கு நிகழ்கின்றது.தற்போதைய ஆளுநர்களை உடனடியாக நீக்கி விட்டு வெளியிடங்களில் இருந்து ஆளுநர்களை நியமிக்காது வடகிழக்கினை சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தொழிற்சங்கமானது வெளியிடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆளுநர்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது.முன்னாள் ஆளுநர் ரோகித போகல்லாகம போன்றோர் சர்வதிகாரமாக எமது மாகாணத்தில் ஆட்சி செய்திருந்தனர்.நாங்கள் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தோம்.மாகாண சபை நிர்வாகத்தை நாம் சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும்.மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் கூட மீள மத்திய அரசாங்கத்திடம் திரும்பி சென்றிருக்கின்றது.இதற்கு காரணம் இந்த மாகாணத்தை சேர்ந்த ஆளுநர்கள் சரியாக செயற்பட்டிருந்தால் வருகின்ற நிதியை சரியாக செலவு செய்திருப்பார்கள்.வட கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் கடந்த காலத்தின் ஆளுநர்களின் இச்செயற்பாடுகளை தட்டிக்கேட்கவில்லை.

அரசியல்வாதிகள் இத்தவறுகளை விட்டிருக்கின்றார்கள்.எமது தொழிற்சங்கத்தையும் மக்களை நித்திரை கொள்கின்ற சங்கம் என நினைக்கின்றார்கள்.எமது உயிரை கூட துச்சமாக மதித்து கடந்த 32 வருடங்களாக வட கிழக்கு மாகாண ஊழியர்கள் உத்தியோகத்தர்களுக்காக நாம் போராடுகின்றோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.எமது உயிர் இருக்கும் வரை மக்களுக்காக எமது சேவையை வழங்குவோம்.இது அரசியல் நோக்கமல்ல மக்கள் சேவை மகேசன் சேவை என்பதே எமது நோக்கமாகும்.இந்த அடிப்படையில் தான் வடகிழக்கில் எமது தொழிற்சங்க செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம்.பொலிஸ் காணி அதிகாரங்கள் வட கிழக்கு மாகாணங்களில் மறுக்கப்பட்டுள்ளதால் சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ள முடியவில்லை.13 ஆவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அப்பால் சென்று இம்மாகாணத்திற்கு மாநில சுயாட்சியை பெற வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.இவ்வாறு செயற்படும் போது தான் இம்மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முடியும்.கடந்த 74 வருடங்களுக்கு முன்னர் விட்ட தவறுகளை புதிய அரசாங்கம் விட கூடாது.ஏனெனில் இந்த 74 வருடங்களாக அரசாங்கம் விட்ட தவறுகளினால் தான் பிரபாகரன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

பிரபாகரன் என் ஆயுதம் ஏந்தி போராடினார் என்பதை சகலரும் உணர வேண்டும்.தமிழ் பேசும் எங்களுக்கு பல அநியாயங்கள் நடந்திருக்கின்றது.எங்களை நாங்கள் ஆளக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.இவ்வாறாக ஜனநாயக முறை மீறப்பட்டமையினால் தான் பிரபாகரன் போன்றோர் உருவாகினார்கள்.அவரது போராட்டம் நியாயமான போராட்டமாகவும் மக்கள் போராட்டமாகவும் இருந்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.வட கிழக்கினை ஆளக்கூடிய நிர்வாகக்கட்டமைப்பினை கேட்டுத்தான் அவர் போராடினார்.அவர் தனிப்பட்ட முறையில் எதுவும் கேட்கவில்லை.மக்களுக்காகவே அவர் போராடினார்.வடகிழக்கு மக்களை ஆளுக்கூடிய நிர்வாகத்தை தாருங்கள் என பிரபாகரன் அண்ணன் கேட்டார்.அதில் என்ன தவறு உள்ளது.சேனநாயக்க முதல் கோத்தபாய வரையிலான ஆட்சியாளர்கள் விட்ட தவறினால் தான் சிறுபான்மை மக்கள் சின்னாபின்னமாகி உள்ளனர்.புதிய அரசாங்கமானது 74 வருடங்களாக விட்டிருந்த தவறுகளை விட வேண்டாம்.இன்று கூட சிங்கள மக்கள் இதனால் தான் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.தமிழ் மக்களின் கடந்த கால போராட்டம் நியாயமானது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

அன்று பிரபாகரன் அவர்களின் போராட்டம் பிழையானது என கூறிய சிங்கள மக்கள் இன்று அது சரியானது என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்.கடந்த 74 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் மக்களை ஏமாற்றினார்களே அன்றி மக்களின் நலனுக்காக செயற்படவில்லை என்பதை மக்கள் அறிவார்கள்.அரசியல்வாதிகள் விடுகின்ற தொடரச்சியான தவறுகளால் மக்களினால் ஜீரணிக்க முடியாதுள்ளது.இன்று டீசல் மண்ணெண்ணேய் எரிவாயு உள்ளிட்ட பலவற்றை பெறுவதற்கு சிரமப்படுகின்றனர்.மக்கள் வாழக்கை சுமையினை தாங்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களை அடக்கி ஆள பார்க்கின்றார்கள்.இவையெல்லாம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளாகும்.எனவே தான் கடந்த கால தவறுகளை மறந்து தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் இனியாவது ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.