அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

தங்களது நாட்டுக்கு சீனாவின் உளவுக் கப்பல் வருவதை இதுவரை மறைத்துவந்த இலங்கை, இப்போது திடீரென ஒப்புக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு சீனாவின் உளவுக் கப்பல் வருவது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அரசியல், பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசியல் பதற்றங்களைத் தணிக்கவும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
ஆனால் சீனா மட்டும் இலங்கையின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு உளவு கப்பலை ஆகஸ்ட் 11-ந் தேதி அனுப்புகிறது. இந்த கப்பல் ஒரு வார காலம் இலங்கை அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும்.
இலங்கைக்குள் நுழையும் சீனாவின் உளவு கப்பலானது, 750 கி.மீக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு. இலங்கையில் இருந்து இந்தியாவில் தமிழ்நாட்டின் கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும் வல்லமை கொண்டது. இதனால் இந்திய தரப்பில் இது தொடர்பாக மேலோட்டமான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் தொடக்கத்தில் இலங்கை இதனை நிராகரித்து வந்தது. தற்போது திடீரென சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாம் இந்த சீன கப்பல். இப்படித்தான் இலங்கை அரசு சொல்லி இருக்கிறது.
2014-ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி கொடுத்தது. அப்போதும் இதேபோன்ற சர்ச்சை வெடித்தது. தற்போது இந்தியாவிடம் கடனுதவி பெற்றுக் கொண்டு இந்தியாவை உளவு பார்க்கும் சீனா கப்பல்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.