;
Athirady Tamil News

இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய்யை இறக்கி தாருங்கள் அதற்கான பணத்தினை இலங்கை ரூபாயில் தருகிறோம்!! (வீடியோ)

0

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் என அண்ணளவாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த பாதிப்பு கடற்றொழில் சமூகத்தை பட்டினியை நோக்கி தள்ளுகின்றது.

கடந்த 60 நாட்களுக்கு மேல் எமக்குரிய மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. நூற்றுக்கு எண்பது வீதமான கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மண்ணெண்ணெய் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று சொல்லி ஏக்கத்தோடு இரண்டு மாதங்களை கடந்து விட்டோம். மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. எங்கள் சமூகம் பட்டினியை நோக்கி நகர்கின்றது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை இன்றளவில் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் கூட கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் இன்று வரை கிடைக்கவில்லை. கடந்த வாரம் 6600 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதை ஆறு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றோம். நூற்றுக்கணக்கான சங்கங்கள் எரிபொருளின்மையால் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. ஜனாதிபதி, எரிசக்தி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் விரைவாக வழங்க நடவடிக்கை வேண்டும்

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நல்லூர் மகோற்சவம் இடம்பெற்று வருவதனால் மீன் உண்பவர்களின் தேவை குறைந்து இருக்கின்றது. அதனால் எங்கள் பாதிப்பு வெளித்தெரியவில்லை.

அதனை தாண்டி நாங்களே உணவை உண்ண முடியாத நிலையில் இருக்கின்றோம். எங்கள் பிரச்சினை தொடர்பான விடங்களை மாவட்ட நிர்வாகம் உரிய தரப்புகளுக்கு அனுப்பவேண்டும்.

நாங்கள் யாரிடம் நிவாரணம் கேட்கவில்லை. உதவி கேட்கவில்லை மண்ணெண்ணெய் தந்தால் போதும் கடற்றொழில் சமூகம் அதற்கான பணத்தை வழங்கும். இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவிடமும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடமும் நான் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன்.

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோம். வடபகுதி கடற்றொழிலாளர்கள் மீது கருணை காட்டி இந்தியத் தூதரகம் விரைந்து செயற்பட வேண்டும்- என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.