;
Athirady Tamil News

கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி

0

அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 54 வருட கால கல்வி பயணத்தில் முதற்தடவையாக அதிகமான “9A” விசேட சித்திகளை பெற்ற இலங்கை திருநாட்டின் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் 34 மாணவிகள் சகல பாடங்களிலும் A சித்தியை பெற்றுள்ளதுடன் 15 மாணவிகள் 8A,B சித்திகளையும், 02 மாணவிகள் 8A,C சித்திகளையும், 08 மாணவிகள் 7A,2B சித்திகளையும், 04 மாணவிகள் 7A,1B,1C சித்திகளையும், ஒரு மாணவி 7A,2C சித்திகளையும் பெற்று விசேட சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இம் மாணவிகளை வாழ்த்திப் பாராட்டுவதோடு, இச் சாதனையை புரிவதற்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கிய கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், இதற்காக மாணவர்களை வழிப்படுத்தி அர்பணிப்புடன் அரும்பணி புரிந்த தரம் 11பிரிவின் பகுதி தலைவர் ஏ.ஆர்.எம். நளீம், உதவி பகுதித் தலைவி ஐ.சிபா தெளபீக், அப்பிரிவின் வகுப்பாசிரியர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பிரதி, உதவி அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், உளவியல் துறை விரிவுரையாளர்கள், முன்னாள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் (SLEAS) நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

விஷேடமாக இந்த கல்லூரியில் பழைய மாணவியாக, ஆசிரியராக, உதவி அதிபராக, கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக பல பரிமாணங்களில் பணியாற்றிய இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) இந்த பாடசாலையை அதிபராக பொறுப்பேற்று கல்வி வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிகளில் வழிகாட்டியாக இருந்து செயற்பட்டமையுடன் கல்வி அபிவிருத்தி மற்றும் பௌதீக வள அபிவிருத்திக்கு பல விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். இதனால் உயர்தர பெறுபேறுகளிலும் பல சாதனைகள் வெற்றியளித்து இவரின் திட்டமிடல்கள் வெற்றியளித்துள்ளமைக்கு பாடசாலை சமூகம் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.