;
Athirady Tamil News

கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு..!!

0

கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கறிக்கோழி கொள்முதல்
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.96 வரை செலவாகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.100 ஆக இருந்தது. இதனை தொடர்ந்து ஆடி மாதம் தொடக்கத்தில் இருந்து கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சிறிது, சிறிதாக குறைய தொடங்கியது.

விலை உயர்வு
கடந்த 1-ந்தேதி முதல் ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (விற்பனை விலை) ரூ.66-ஆக இருந்தது. இதனால் கிலோவிற்கு ரூ.30 வரை உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அண்டை மாநிலங்களில் மழை குறைந்ததால் இறைச்சி விற்பனை அதிகரிக்க அதற்கு தகுந்தவாறு கொள்முதல் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக கொள்முதல் விலை ரூ.91 ஆக (உயிருடன்) உள்ளது. இறைச்சி கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் விலையில் மாற்றம் காணப்படுகிறது.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் நிறைவுபெற்று ஆவணி மாதம் பிறக்கிறது.

தொடர்ந்து திருமணம் போன்ற விசேஷங்கள் நடத்தப்படும் என்பதால் கறிக்கோழிக்கு தேவை அதிகரித்து கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது.

தற்போது உற்பத்தி செலவிற்கும், விற்பனை விலைக்கும் இடையே ரூ.5 வித்தியாசம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.