;
Athirady Tamil News

நிந்தவூர் பிரதேச கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலருடன் பைசல் எம்பி சந்திப்பு!! (படங்கள்)

0

*தடுப்பு நடவடிக்கைக்கு அவசர நிதியாக 20 மில்லியன் ஒதுக்கீடு

* ஒலுவில் துறைமுகத்துக்குள் இருக்கும் கற்பாறைகளை உடன் விடுவிக்க பணிப்பு

*கரையோர பாதுகாப்புக்கு ‘ஜியோ பாக் ‘Geobag இறக்குமதி செய்வதற்கு டொலரை வழங்குவதாகவும் உறுதி

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் நடவடிக்கையாக முதல் கட்ட நடவடிக்கையாக உடனடியாக 20 மில்லியன் ரூபாயை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை வியாழக்கிழமை(25) குறித்த நிந்தவூர் பகுதி கடல் அரிப்பின் அவலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பின் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகார சபை ஆகியவற்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் அவசர பணிப்புரைகளை விடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

இதே நேரம், அவசர தடுப்பு நடவடிக்கையாக, ஒலுவில் துறைமுகத்தினுள் இருக்கின்ற கற்பாறைகளை விடுவித்து நிந்தவூர் பிரதேச கரையோரங்களுக்கு போடுமாறு துறைமுக அதிகார சபைக்கு .துறைமுக அதிகார சபையின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
துறைமுக அதிகார சபையின் தலைவர் கயான் அழுகவர்த்தயுடன், பைசல் காசிம் எம்பி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து உடனடி நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கின்ற நிலையில், பைசல் காசிம் எம்பி இது சார்ந்த அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களுடன் இன்று பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தினார். இதன் மூலமே, முதல்கட்ட பணிகளாக இருவது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஒலுவில் துறைமுகத்துக்குள் இருக்கின்ற கற்பாறைகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது.

பைசல் காசிம் எம்பி, ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபயவர்த்தனவை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். கடலரிப்பை தடுப்பதற்கான துரித பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வஜிர அபயவர்த்தன துறை சார் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணிபுரை விடுத்தார்.

இதே வேளையில், கரையோர பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவை சந்தித்ததோடு, கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினுடைய பணிப்பாளர் நாயகம் ரணவக்கவையும் சந்தித்து விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, துறைமுக கப்பல் துறை அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவை சந்தித்த பைசல் காசிம் எம்பி, கடல் அரிப்பு சம்பந்தமான நீண்ட விளக்கம் ஒன்றை தெளிவாக வழங்கினார். நிந்தவூர் பிரதேசத்தின் நிலைமையை அவரிடம் விளக்கியதையடுத்து, இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆர்வமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற ‘ஜியோ பேக்’களை உடனடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதற்குரிய டொலரை பெற்று தருவதாக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க உறுதி அளித்தார்.

இதே நேரம், கடல் அரிப்பு தொடர்பாக நேரில் ஆராய்ந்து நிரந்தர தீர்வு காண்பதற்காக, உயர் மட்ட தொழில்நுட்ப குழு ஒன்றை அடுத்த வாரம் அனுப்புவதாகவும் அவர் உறுதி அளித்தார். இதன்படி,அடுத்த வாரம் நிந்தவூர் பிரதேசத்துக்குச் செல்லும் உயர்மட்ட குழு,நிரந்தர தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முதல் கட்ட செயல்பாடாகவே முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார். முழுமையான ஆய்வொன்று நடத்தப்பட்டு நிந்தவூர் கரையோர பிரதேசங்களை பாதுகாப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று ம் ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, கரையோர பிரதேசங்களை பாதுகாப்பதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்களின் வரைபடங்களையும் பைசல் காசிம் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.

இது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் உறுதி அளித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.