உறுதிமொழிகள் பெறப்படும்வரை நிதி உதவி அங்கீகரிக்கப்படாது!!

அரசியல் ஸ்திரமின்மை சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், ஐ.எம்.எப் நிதியை பெற்றுக்கொள்ளவும் பாதகமாக அமையும் என ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு குறித்து உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த வேண்டும், எனினும் எந்தவொரு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் கால எல்லையும் நிச்சயமற்றதாகவே காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், அரசாங்கம் இணங்கிய முன் நடவடிக்கைகளை செயல்படுத்தும் வரை, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதி உறுதிமொழிகள் பெறப்படும் வரை, உடன்படிக்கையை செய்துகொள்ள நம்பிக்கையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரை, விரிவாக்கப்பட்ட நிதி வசதியை ஐ.எம்.எப் இன் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்படாது என்பதையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக வரி கொள்கையில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும், தேவையற்ற அரச செலவீனங்களை குறைக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், அரசியல் ஸ்திரமின்மை சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கும், கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டாலும், ஐ.எம்.எப் நிதி விநியோகத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.