;
Athirady Tamil News

தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு- கோடீஸ்வரர்கள் தெருக்கோடிக்கு வந்த அவலம்..!!

0

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சர்ஜாப்புரா ரோட்டில் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரெயின்போ லே-அவுட் அருகே உள்ள ஒரு கிரானைட் கற்கள் விற்பனை கடையில் வெள்ளம் புகுந்ததால் அந்த கடை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதுபோல பஸ் நிறுத்தமும் தண்ணீரில் மிதக்கிறது.

சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. விப்ரோ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 50 கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதுபோல சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள கன்ட்ரிசைட் என்ற அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியும் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன.

சர்ஜாப்புரா ரோட்டில் தேங்கி இருந்த மழைநீரில் ஒரு சொகுசு கார் சிக்கி கொண்டது. இதனால் அந்த காரில் வந்தவர்கள் காரை சாலையில் விட்டுவிட்டு சென்று விட்டனர். பெங்களூருவை பொறுத்தவரை கோடீஸ்வரர்களின் உலகம் எனலாம். 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். இந்த பெரும் பணக்காரர்களையும் கன மழை வெள்ளம் அவர்களை சாதாரண மக்களை போல தத்தளிக்கும் நிலைக்கு ஏற்படுத்திவிட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த தொழில் அதிபர்கள் பெரும்பாலோர் படகுகளில் மீட்கப்பட்டனர். அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இவர்கள் அறை எடுத்து குடும்பத்தோடு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் முக்கிய ஓட்டல்கள் 10 முதல் 15 நாட்களுக்கு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டல்களில் அறைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஒரு தொழிலதிபர் ஒரு ஹோட்டலில் நான்கு பேருக்கு ஒரு இரவுக்கு ரூ.42ஆயிரம் கொடுத்து தங்கினார். மழை வெள்ளம் அதிகமாகி உள்ளதால் மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேரை இவர்கள் மீட்டனர். பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் உண்டானது. பெங்களூரு மத்திகெரே பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள் சேதம் அடைந்தன. பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கனமழை பெய்து வருவதால் பெங்களூரு மகாதேவபுரா பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.

அப்பகுதியில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம் அடைந்தன. இதனால் கடந்த 3 நாட்களாக மகாதேவபுராவில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு அருகே அமைந்துள்ளது நந்தி பெட்டா மலைப்பகுதி. இந்த பகுதி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது. இந்த மலையில் கனமழையால் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. துமகூரு மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் சேலூரில் 11 வீடுகள், சி.எஸ்.புராவில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மதுகிரி தாலுகாவில் 170 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. ஷிரா தாலுகா கல்லம்பெல்லாவிலும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகா தொண்டேஹல்லா கிராமத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் பெயர்கள் மகேஷ், நிங்கப்பா ஆகும். இவர்கள் 2 பேரும் கதக் மாவட்டம் முண்டரகி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தனர். எலபுர்காவில் நடந்த விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிக்கு வந்துவிட்டு திரும்பிய போது அவர்கள் உயிரிழந்து உள்ளனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் பெய்த கனமழைக்கு கோழி பண்ணையில் தண்ணீர் புகுந்ததால் 12 ஆயிரம் கோழிகள் செத்தன. அதுபோல கே.ஆர்.புரத்தில் பெய்து வரும் கனமழைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. விதான சவுதாவின் தரைதளத்திற்கு கீழ் உணவகத்தில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் விதான சவுதா வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் போலீஸ் நிலைய கட்டிடங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது. இதனால் அங்கு இருந்த மருந்து-மாத்திரைகள் மற்றும் பொருட்கள் நீரில் கலந்து சேதம் அடைந்தன.

ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள ஷிலவந்தகெரே, வர்த்தூர் ஆகிய ஏரிகள் உடைந்தன. இதனால் ஏரிகளில் இருந்து வெள்ளம் சீறிப்பாய்ந்த தண்ணீர் டி-சைட் அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்தது. இதனால் தரைமட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுபற்றி அறிந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று அந்த குடியிருப்பில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். பரிசல்கள், பொக்லைன் எந்திரங்களும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்கள் மூலமும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் டிராக்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். ஏரிகள் உடைப்பு காரணமாக பெல்லந்தூர், காடுகோடி, சர்ஜாப்புரா ரோடு, ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

இதனால் அந்த குடியிருப்புகள் தீவு போல் காட்சி அளிக்கிறது. அந்த குடியிருப்புகளில் உள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோல உரமாவு பகுதியில் சாய் லே-அவுட்டில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பெங்களூரு-சென்னை சாலையில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 15 மாவட்ட கலெக்டர்களுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். உத்தர கர்நாடகா, தக்சின் கர்நாடகாவிற்கு இன்று தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட். பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.