;
Athirady Tamil News

நிலக்கரி விநியோகம் மூலம் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக ரஷியா திகழும்- பிரதமர் மோடி..!!

0

ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற 7-வது கிழக்கு பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: காணொலி காட்சி வாயிலாக சிறப்பு விருந்தினர் அதிபர் புதின் உடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். விளாடிவோஸ்டாக்கில், இந்திய தூதரகம் அமைக்கப்பட்டதன் 30-ம் ஆண்டு இம்மாதம் கடைப்பிடிக்கப் படுகிறது.

இந்நகரத்தில், முதல் முதலாக இந்தியா தான் தூதரகத்தை திறந்தது. அதன் பிறகு நமது நட்புறவின் அடையாளமாக இந்நகரம் திகழ்ந்தது. 2019-ஆம் ஆண்டில், இந்த மன்றக் கூட்டத்தில், பங்கேற்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்நேரத்தில், இந்தியாவின் கிழக்கு தூரக் கொள்கையை நாம் அறிவித்தோம். இன்று இந்தக் கொள்கை இந்தியா மற்றும் ரஷியாவின் சிறப்பு நட்புறவில் முக்கிய தூணாக திகழ்கிறது. சென்னை – விளாடிவோஸ்டாக் கடல்சார் முனையம் அல்லது வடக்கு கடல்வழி போக்குவரத்து நமது எதிர்கால வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிக்கும். ஆர்டிக் விவகாரங்களில் ரஷியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது.

எரிசக்தித் துறையில் சிறந்த ஒத்துழைப்பிற்கான வாய்ப்பு உள்ளது. எரிசக்தித்துறையுடன் ரஷிய தூரகிழக்கு கொள்கையின்படி மருந்து மற்றும் வைரங்கள் துறைகளில் இந்தியா பெருமளவு முதலீடு செய்துள்ளது. நிலக்கரி விநியோகம் மூலம் இந்திய எஃகு துறையில், முக்கிய கூட்டாளியாக ரஷியா திகழ முடியும். திறன்களை பரிமாறிக் கொள்வதில் நமக்கிடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது. உலகின் பல்வேறு வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்தியா திறன்களை பகிர்ந்துள்ளது. உலகம் ஒரு குடும்பம் என்ற இந்தியாவின் பழங்கால கோட்பாடுபடி இன்றைய உலகமயமாக்கலில் உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் நிகழ்வுகள் மொத்த உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவை உலக விநியோக அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருள் ஆகியவற்றில் ஏற்பட்ட பற்றாக்குறை வளரும் நாடுகளில் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது. உக்ரைன் ரஷியா போரின் தொடக்கத்திலிருந்தே தூதரக அளவிலான பேச்சுவார்த்தையை நாம் வலியுறுத்தி இருக்கிறோம். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து அமைதிக்கான முயற்சிகளுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். இந்த வகையில், தானியங்கள் மற்றும் உரங்களின் பாதுகாப்பான ஏற்றுமதி ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த மன்றக் கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பளித்த அதிபர் புதினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.