;
Athirady Tamil News

பணிநீக்கம் செய்ததை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..!!

0

28 பணியாளர்கள் நீக்கம்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா திருமாந்துறையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் முறையில் நடத்தி வருகிறது. இந்த நிலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் தொழிலாளர்களும் நேற்று காலை திருமாந்துறை சுங்கச்சாவடியின் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனங்கள்
காத்திருப்பு போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுங்கச்சாவடியில் 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்த தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் விஜயகுமார் கூறுகையில், திருமாந்துறை சுங்கச்சாவடியை போல், கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 32 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு என்று அறிக்கை வெளியிட்டும், அவர்களை பணியில் அமர்த்த ஒப்பந்த நிறுவனம் மெத்தன போக்கை கையாண்டு வருகிறது. பணியாளர்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும், என்றார். பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகனங்கள் இலவசமாக சென்று வருகின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.