;
Athirady Tamil News

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் தொண்டர்களுடன் சேர்ந்து முலாயம் சிங் யாதவுக்கு மவுன அஞ்சலி..!!

0

உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியாகவும் இருந்த அவர், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார். நேதாஜி என்று அவரது ஆதரவாளர்களால் அன்புடன் அழைக்கப்படும் முலாயம் சிங் யாதவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்துக்கு உட்பட்ட சைபாய் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் சொந்த ஊரிலேயே முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் 10-வது நாள் பாதயாத்திரையின் போது, இன்று கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் முலாயம் சிங் யாதவுக்கு ராகுல் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார். இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார். அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ராகுல் காந்தியின் 10-வது நாள் பாதயாத்திரை இன்று காலை தொடங்கியது. வழிநெடுகிலும் ராகுல்காந்திக்கு கட்சியினர், பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். இந்த நடைபயணத்தின் போது நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தெருக்களில் வரிசையாக நின்று முலாயம் சிங் யாதவுக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, முலாயம் சிங் யாதவ் இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜவாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் இளைஞரணி செயலாரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.