;
Athirady Tamil News

பஞ்சர் போடும் சொல்யூஷனை முகர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் மரணம்..!!

0

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பிடுகுராலு அருகே உள்ள சீனிவாசபட்டி காலனியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் வாகனங்களின் டியூப்களுக்கு பஞ்சர் போடும் சொல்யூஷனை துணிகளில் வைத்து முகர்ந்து பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்தான். சொல்யூஷனை முகர்ந்து பார்ப்பதால் ஏற்படும் ஒரு வித போதைக்கு சிறுவன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவரது பெற்றோர் பலமுறை அடித்து பார்த்தும், கண்டித்தும் சிறுவனால் அந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்த சிறுவன் மாடிக்கு சென்றான். நீண்ட நேரமாகியும் மாடிக்கு சென்ற மகன் வராததால் அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தான். அவன் அருகே சொல்யூஷன் டியூப் இருந்தது. சிறுவனை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனின் மரணம் குறித்து டாக்டர்கள் கூறுகையில்:-
பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சொல்யூஷன், ஒயிட்னர் போன்ற சிறு போதை தரும் பொருட்கள் சிறுவர்களுக்கு தாராளமாக கிடைத்து விடுகிறது. ஒருவருக்கு இருக்கும் பழக்கம் அவருடன் பழகும் மற்ற சிறுவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. இது போன்ற பழக்கத்திற்கு ஆளாகும் சிறுவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க முடியும். போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அவர்களை மீட்பது சிரமம். எனவே சிறுவர்களை அவர்களது பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.