;
Athirady Tamil News

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடு !!

0

தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து கல்வியமைச்சின் செயலாளருக்கு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்துடன் இணைந்து, வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை மாணவர்களுக்கான வினாத்தாள்களை பெறுவதுடன் அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் அனுமதித்து வருகின்றார்.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதுடன் அந்த நிறுவனத்துக்காக ஆசிரியர், அதிபர்களைப் பயன்படுத்தி பரீட்சைகளை நடத்துதல் மற்றும் வினாத்தாள்களை திருத்துதல் என்பன தவறான செயற்பாடாகும்.

இந் நிறுவனத்தின் வினாத்தாள் திருத்துவது தொடர்பாகவோ பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுவது தொடர்பாகவோ ஆசிரியர் அதிபர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படாமல், வடமாகாண கல்விப் பணிப்பாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்செயற்பாட்டில் ஈடுபடுவது பாரிய பிரச்சினையாகும்.

குறித்த நிறுவனத்தின் பழைய ஒருவருட கணக்காய்வின்படி- மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பரீட்சைக் கட்டணத் தொகையிலிருந்து கிடைத்த வருமானம் பலமில்லியன்களாகும். இதன் மூலம் குறித்த நிறுவனம் அடைந்துவரும் இலாபத்தினை அறிந்துகொள்ளலாம்.

இந் நிறுவனம் பாடசாலைகளிடமிருந்து பணம் அறவிட்டு பரீட்சை நடத்தும் அதேவேளை, குறித்த நிறுவனம் பரீட்சை தொடர்பாக விசுவாசமான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கவில்லை.

இவ்வாறான விடயங்கள் சம்பந்தமாக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மூலம் குறித்த நிறுவனத்தின் பரீட்சைகள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்ட விபரங்களையும் இணைத்துள்ளோம்.

வட மாகாண கல்வித் திணைக்களம் மூலம் இச்செயற்பாடுகளை செய்ய வாய்ப்பிருந்தும், ஆசிரியர் அதிபர்களுக்கு அநீதி இழைக்கும் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறுவது தொடர்பாக விசாரணையை கோருகின்றோம் என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.