;
Athirady Tamil News

ஈராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!

0

ஈராக் நாட்டின், வாசிட் மாகாணத்தில் இருந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக, அம்மாகாண ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தச் சம்பவத்தில், பெரும்பாலானோர் தப்பிக்க வழியின்றி மூச்சுத்திணறி பலியானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அந்த வணிக வளாகக் கட்டடத்தில், போதுமான அத்தியாவசிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால், இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும், அலட்சியமாகச் செயல்பட்ட வாசிட் ஆளுநர் முஹமது அல்-மியாஹி உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலக வேண்டுமெனவும், அம்மாகாண மக்கள் மற்றும் பலியானோரது குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

மேலும், இந்த தீ விபத்தானது பலகாலமாக நடைபெற்று வரும் அரசு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சியம் ஆகியவற்றால் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இத்துடன், இராக் நாடாளுமன்ற சபாநாயகர் மஹ்மூத் அல் – மஷ்தானி, வாசிட் ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய, அந்நாட்டு பிரதமர் முஹமது ஷியா அல் – சுதானிக்கு கோரிக்கை அனுப்பினார். மேலும், அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பலியான தியாகிகளின் ரத்ததுக்கு மரியாதைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டு, வாசிட் மாகாணத்தின் ஆளுநர் முஹமது அல் – மியாஹி, நேற்று (ஜூலை 23) தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, வாசிட் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹாடி மஜித் கஸ்ஸார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, இராக்கில் தரமற்ற முறையில் கட்டப்படும் கட்டடங்களினால், அந்நாட்டில் தீ விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகின்றது. கடந்த 2023-ம் ஆண்டு ஹம்தானியா நகரத்தில் திருமண அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.