;
Athirady Tamil News

பெங்களூருவில் 3 மாதங்கள் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிப்பு..!!

0

பெங்களூருவில் 3 மாதங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ‘பெஸ்காம்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘பெஸ்காம்’ முடிவு
பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்), பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. பொதுவாக தொடர்ந்து 2 மாதங்கள் மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால், மின்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு வந்து மின் வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். அதாவது பீஸ் கேரியரை கழற்றிவிடுவார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய உடனேயே மீண்டும் மின் வினியோகத்தை வழங்குவார்கள். இந்த நிலையில் மின் நுகர்வோர், தொடர்ந்து 3 மாதங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டித்து, பெஸ்காமால் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பெஸ்காம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு அனுமதி ரத்து செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள், மீண்டும் முறைப்படி விண்ணப்பித்து புதிதாக மின் இணைப்பை பெற வேண்டும்.

மின் இணைப்பு துண்டிப்பு
இதுகுறித்து பெஸ்காம் நிர்வாக இயக்குர் மகாந்தேஷ் பீலகி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “மின் நுகர்வோர், 3 மாதங்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்த தவறினால் மின் இணைப்புக்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதாவது மின் இணைப்பு துண்டிக்கப்படும்.அவ்வாறு அனுமதி ரத்து செய்யப்பட்ட பிறகு மின் இணைப்பு வேண்டுமென்றால் மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பெஸ்காமின் இந்த முடிவால் மின் கட்டண பாக்கி வைத்துள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.