;
Athirady Tamil News

கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தத்தால் அனுமதி அளிக்கப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்..!!

0

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி, கோவேக்சின். ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகளில் பிரதான இடத்தை பெற்று உள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்படி தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டதாகவும், இதனால் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தன.மேலும் தடுப்பூசியின் 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.இது இந்திய மருத்துவம் மற்றும் விஞ்ஞான துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு கடுமையாக மறுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோவேக்சின் தடுப்பூசி குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை. கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதித்ததில் மத்திய அரசும், மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பும் ஒரு விஞ்ஞான அணுகுமுறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியுள்ளன என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு கடந்த ஆண்டு ஜனவரி 1 மற்றும் 2-ந்தேதிகளில் கூடி விரிவாக ஆலோசனை நடத்திய பிறகே, கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கியது.தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு, இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து மேற்படி நிபுணர் குழுவினர் விரிவாக ஆய்வு செய்த பிறகே பரிந்துரைகளை வழங்கினர்.

பாரத் பயோடக் நிறுவனம் வழங்கிய விஞ்ஞான பூர்வ தரவுகள் மற்றும் இது தொடர்பாக நிறுவப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையிலேயே கோவேக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு மேற்படி நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது.இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கோவேக்சின் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தேசிய கட்டுப்பாட்டாளரால் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிபுணர் குழுவில் நுரையீரல், நோயெதிர்ப்பு, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தை மருத்துவம், உள் மருத்துவம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதைப்போல கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என பாரத் பயோடெக் நிறுவனமும் கூறியுள்ளது.இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவிலும் உலக அளவிலும் கொரோனாவை கட்டுப்படுத்தி உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவதற்கான அழுத்தம் அனைத்தும் எங்களிடம்தான் இருந்தது’ என கூறியுள்ளது. உலகளவில் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட தடுப்பூசிகளில் கோவேக்சினும் ஒன்று எனக்கூறியுள்ள அந்த நிறுவனம், இது 3 கட்ட சோதனைகள் மற்றும் 9 மனித மருத்துவ ஆய்வுகள் உள்பட 20 மருத்துவ ஆய்வுகளில் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும, மற்ற எந்த இந்திய தடுப்பூசிகளையும் விட இது அதிகம் என்றும் கூறியிருக்கிறது.இந்த சோதனைகளில் கோவேக்சினின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தெளிவாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.