;
Athirady Tamil News

புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்!!

0

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், ஆகியோருடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் ஆசன பங்கீடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன்,வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இன்றைய கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாதநிலையில் கட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடி இறுதி முடிவை எட்டுவதுடன் சனிக்கிழமை கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது, கூட்டணிக்கான பொதுப்பெயர், கூட்டணி ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.