;
Athirady Tamil News

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – மார்ச் 12 அமைப்பு அரசியலமைப்பு !!

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடியும்வரை தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை எந்த தடையும் இல்லாமல் முன்னெடுத்துச் செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்ச் 12 அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 12 அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டிஆரச்சி ஜனாதிபதி உட்பட அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்தின் அடிப்படையில் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். என்றாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய ஆணைக்குழு அமைப்பது அல்லது தற்போது இருக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை மாற்றியமைப்பதன் மூலம் தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போவதுடன் சமூகத்தில் சந்தேகங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போகும்.

அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடியும்வரை தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை எந்த தடையும் இல்லாம் முன்னுக்கொண்டு செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நீங்கள் உட்பட அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

அத்துடன் அரசியலமைப்புச் சபையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கமாக இருப்பது, அரச சேவை, நீதிமன்றம், தேர்தல் மற்றும் பொலிஸ் போன்ற நிறுவனங்களை மிகவும் சுயாதீன நிறுவனங்களாக அமைப்பதாகும். இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதாக இருந்தால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்படும் நபர்கள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அரசியலில் நடுநிலையாக இருந்து, தங்களுக்கு உரித்தான துறைதொடர்பாக போதுமான அறிவுடைய நபர்களாக இருக்கவேண்டும் என்பதில் எந்த தர்க்கமும் இல்லை.

ஏனெனில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்படும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் நாட்டின் எதிர்கால இறுப்புக்கு தீர்மானமிக்கதாக அமையும். அதனால் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு வெளிப்படைத்தன்மைமிக்க முறையான நடவடிக்கை ஒன்றை அமைக்கவேண்டும். ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு முன்னர் ஆணைக்குழுக்களின் செயல்பாடு தொடர்பான நடைமுறைகளைத் தயாரிக்க வேண்டும்.

அத்துடன் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்பது சமூகத்தில் மதிப்புமிக்க பதவி என்பதால், அந்த தரத்தில் இருப்பவர்கள் விண்ணப்பிப்பதற்கு இருக்கும் சந்தர்ப்பம் மிக குறைவு. அதனால் விண்ணப்பம் கோருவதற்கு பதிலாக பெயரிடும் முறையொன்றை தயாரிக்க வேண்டும். அத்துடன் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யும்போது இன ரீதியிலான பிரதிநிதித்துவம் மற்றும் பெண்கள் பிரநிதிநித்துவம் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பாக நீங்கள் உட்பட அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களின் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் அரசியலமைப்பு பேரவை எடுக்கும் தீர்மானம் மூலம் நாட்டின் ஜனநாயகமும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.