கனடாவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 3 தொழிலாளர்கள் 60 மணி நேரத்திற்கு பின் மீட்பு
கனடாவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 3 தொழிலாளர்கள் 60 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்கு கனடாவில் உள்ள ஒரு தங்கம் மற்றும் செம்பு சுரங்கத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் 60 மணி நேரத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நியூமாண்டு கார்ப்பரேஷன் (Newmont Corp) நடத்திய Red Chris சுரங்கத்தில், செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பாறை இடிப்புகளால் ஏற்பட்ட தடையால், Hy-Tech Drilling நிறுவனம் சார்பில் பணியாற்றிய கெவின் கும்ப்ஸ், டேரியன் மெட்யூக், ஜெஸ்ஸி சுபாடி ஆகியோர் சிக்கினர்.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இது மிக கவனமாக திட்டமிடப்பட்ட, மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கை” என கூறப்பட்டது.
மீட்பு திட்டம் எப்படி நடந்தது?
சுமார் 20-30 மீட்டர் நீளம் மற்றும் 7-8 மீட்டர் உயரம் கொண்ட பாறை விழுந்து சுரங்க வழியை மூடியது.
ட்ரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் ஸ்கூப்புகள் மூலம் தடைகளை அகற்றினர்.
பின்னர், அவசர சேவை குழு பாறைகளை அகற்றி, பாதுகாப்பு அறைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்டது.
அவர்கள் சிக்கியிருந்த பகுதியில் உணவு, குடிநீர் மற்றும் காற்று சப்ளை தொடர்ச்சியாக இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை.
வான்கூவரிலிருந்து 1,600 கிமீ தொலைவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்குப் பகுதியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுரங்க மற்றும் கனிம அமைச்சரும், “இவர்கள் குடும்பத்துடன் மீண்டும் சந்திக்கப் போகிறார்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.