;
Athirady Tamil News

2027-ம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனங்களை தடை செய்ய வல்லுநர் குழு மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை!!

0

காற்று மாசுபடுவதை தடுப்பதற்காக மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய எண்ணெய் அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாக அளித்துள்ளது. அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை இந்தியா 2027-ம் ஆண்டிற்குள் தடை செய்ய வேண்டும். மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 2035-ம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் 3 சக்கர வண்டிகளை படிப்படியாக நிறுத்தவும் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பத்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் டீசலால் இயங்கும் மாநகர பேருந்துகளை குறைக்கவும் பரிந்துரைத்து உள்ளனர். அதேபோல் 2035-ம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரத்துடன் கூடிய 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை படிப்படியாக வெளியேற்றுவதற்கு உகந்த தீர்வாக, இடைப்பட்ட காலத்தில், அதிகரித்து வரும் எத்தனால் கலந்த எரிபொருளுக்கான கொள்கைக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

பயணிகள் கார்கள் மற்றும் டாக்சிகள் உட்பட 4 சக்கர வாகனங்கள், ஒவ்வொரு வகையிலும் கிட்டத்தட்ட 50 சதவீத பங்கைக் கொண்ட பகுதியளவு மின்சாரத்திற்கும், பகுதி எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் மாற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். பெட்ரோலால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை படிப்படியாக நிறுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளனர். நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க, மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை மார்ச் 31-ந்தேதிக்கு அப்பால் அரசாங்கம் “இலக்கு நீட்டிப்பு” செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 2024-க்குள் சரக்குகளை கையாள்வதற்கு ரெயில்வே மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் டிரக்குகளை அதிக அளவில் பயன்படுத்தவும் பரிந்துரை செய் துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. ஆனால் அதை நோக்கிய பயணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.