;
Athirady Tamil News

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆஸ்திரேலிய வீரர் உயிரிழப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி!!

0

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் துணையுடன் முகாம் நோக்கி வந்தார். ஆனால் கடுமையான காற்று வீசியதால் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களால் பொதுவாக ‘மரண மண்டலம்’ என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார். அவரது உடல் இன்னும் மலையிலேயே உள்ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கென்னிசனின் மரணம் குறித்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மிகவும் தைரியமான கென்னிசன் சிகரத்தை அடைய வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு திரும்பவில்லை, என அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஹிமாலயன் டைம்ஸ் செய்திக்கு வழிகாட்டி ஒருவர் அளித்த பேட்டியில், ‘சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் போது கென்னிசன் அசாதாரணமாக இருப்பதை கவனித்தோம். அவருடன் இருந்த இரண்டு ஷெர்பா வழிகாட்டிகள், கடல் மட்டத்தில் இருந்து 8,400மீ உயரத்தில் உள்ள பால்கனி பகுதிக்கு இறங்க உதவினார்கள்’ என்றார். எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது. நேபாள சுற்றுலாத் துறையின் தகவலின்படி, இந்த சீசனில் இதுவரை 450 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.