;
Athirady Tamil News

அமெரிக்கா தேடும் வெனிசுலாவின் இளவரசர்… யாரிந்த மதுரோ குவேரா

0

வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நிக்கோலஸ் குவேராவை அமெரிக்கா தீவிரமாக தேடி வருகிறது.

முக்கியப் பங்கு
நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது போதைப்பொருள் பயங்கரவாத வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், இவர்களுடம் இன்னும் 6 பேர்கள் மீதும் அமெரிக்கா இதே வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

அதில் ஒருவர் மதுரோவின் மகனான நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குவேரா. அமெரிக்காவில் போதைப்பொருட்களைக் கடத்திய, அரசுடன் தொடர்புடைய ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் அவர் முக்கியப் பங்கு வகித்தார் என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெனிசுலாவில் Nicolasito அல்லது வெனிசுலாவின் இளவரசர் என அறியப்படும் நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குவேரா கடந்த 1990ல் பிறந்துள்ளார்.

நிக்கோலஸ் மதுரோவின் முதல் மனைவியான அட்ரியானா குவேரா அங்குலோவின் மகன் இவர். அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோவின் ஒரே மகன்.

2014 வரை வெனிசுலாவின் பொது அமைச்சகத்தில் பணியாற்றினார், பின்னர் தனது தந்தையின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் அரசியலில் நுழைந்தார்.

2017ல் அரசியலமைப்புச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு, அமெரிக்காவை அச்சுறுத்தியதன் மூலம் அவர் பிரபலமடைந்தார்; வெனிசுலா தாக்கப்பட்டால், துப்பாக்கிகள் நியூயார்க்கை பதம் பார்க்கும் என்று அவர் எச்சரித்தார்.

ஆயுள் தண்டனை
இந்த நிலையில், மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதன் பின்னர், குவேரா தலைமறைவாகியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டித்தும், ஒரு உள்நாட்டுச் சதித்திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டியும், அவர் ஜனவரி 5 ஆம் திகதி வெனிசுலா மக்களிடம் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார்.

அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட ஃபெடரல் குற்றப்பத்திரிகையில், எர்னஸ்டோ மதுரோ தனது தந்தை மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.

கூடுதலாக, அவர் மியாமி உள்ளிட்ட அமெரிக்க நகரங்களுக்கு ஏற்றுமதிகளை ஏற்பாடு செய்ததாகவும், அரசுக்கு சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகவும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் தொழிலைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அழிவுகரமான சாதனங்கள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் அவரிடம் இருப்பதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கச் சட்டத்தின் அடிப்படையில், இந்த குற்றங்களில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றே தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.