முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ – நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ சேவையை கோவாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலை கோவா ஷிப்யார்டு நிறுவனம் (ஜிஎஸ்எல்) கட்டமைத்துள்ளது. 114.5 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4,200 டன் எடையுள்ள இந்த கப்பல் 22 நாட்டிக்கல்லுக்கும் அதிகமான வேகத்தில் 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை பயணிக்கும் திறனை உள்ளடக்கியுள்ளது.
கடல்சார் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்துதல், கடல்சார் சட்ட அமலாக்கம், தேடல், மீட்புப் நடவடிக்கை மற்றும் இந்தியாவின் பிரத்தேயக பொருளாதார மண்டலத்தை பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்கு இந்த கப்பல் ஒரு முக்கிய தளமாக செயல்படும்.
இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான சமுத்திர பிரதாப், நாட்டின் கப்பல் கட்டும் சிறப்புக்கும், தூய்மையான, பாதுகாப்பான மற்றும் தற்சார்பு கொண்ட கடல்சார் எதிர்காலத்துக்கான நீண்டகால தொலைநோக்குப் பார்வைக்கும் ஒரு சான்றாகத் திகழ்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துணை ஆய்வாளர் ஜெனரல் அசோக் குமார் பாமா தலைமையில் இயங்கும் இந்த கப்பல் கொச்சியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில், 14 அதிகாரிகள் மற்றும் 115 பணியாளர்கள் அடங்கிய குழு உள்ளது. இந்தக் குழுவில் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றும் முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகளின் நியமனமும் அடங்கும் என்று இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.