ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் மோசடி!!
வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு நகர் திருகோணமலை வீதியில் அமைந்துள்ள சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளரும் அவரின் முகாமையாளர் மற்றும் சப் முகவர்கள் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக தெரிவித்து பல பேரிடம் சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்டுள்ளனர்.
பணத்தை வழங்கிய சிலரை வேலைக்கு அனுப்புவது போல சுற்றுலா விசாவில் துபாய் மற்றம் கட்டார் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அங்குச் சென்று தொழில் இல்லாது கைவிடப்பட்டு நடுவீதியில் நிர்க்கதியாகி, தங்களது உறவினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் தமது சொந்த பணத்தை செலுத்தி விமான சீட்டை பெற்றுக் கொண்டு நாடுதிரும்பினர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில் பலர், வெளிநாட்டு வேலை பெற்றுதருவதாக மோசடியில் ஈடுபட்ட சப் ஏஜன்டுக்களுக்கு எதிராக மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இரு சப் ஏஜன்ட்டுக்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது வேலைவாய்ப்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். எனினும், அதன் முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.