இளவரசர் ஹரியின் மனைவி மேகன் பிரித்தானியா வர வாய்ப்பேயில்லை: ராஜ குடும்ப நிபுணர்
இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரித்தானியா திரும்ப வாய்ப்பேயில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
பிரித்தானியா வரும் ஹரி
அமெரிக்காவில் தன் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் இளவரசர் ஹரி, தன் தந்தையான மன்னர் சார்லசும், தன் அண்ணியான இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அவர்களை சந்திக்க திட்டமிட்டுவருகிறார்.
போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக, இன்விக்டஸ் என்னும் விளையாட்டுப்போட்டிகளைத் துவக்கி நடத்தி வருகிறார் ஹரி. அது தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக, அவர் அடுத்த மாதம், அதாவது, மே மாதம் பிரித்தானியாவுக்கு வர உள்ளார்.
அப்போது அவர் மன்னரையும், இளவரசி கேட்டையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
வாய்ப்பேயில்லை
இந்நிலையில், தங்களை சந்திக்க வருமாறு ஹரிக்கும் அவரது மனைவிக்கும் இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும் அழைப்பு விடுத்துள்ளதுடன், தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வருமாறும் அவர்கள் ஹரி மேகன் தம்பதியரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், மேகன் பிரித்தானியா வர வாய்ப்பேயில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான எஸ்தர் (Esther Krakue) என்பவர்.
பிரித்தானியா வருவதில் மேகனுக்கு ஆர்வமில்லை என்று கூறும் எஸ்தர், அவர் வந்தால் இளவரசி கேட்டுடன் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பெல்லாம் காணப்படும் நிலையில், பிரித்தானியாவில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலான வழக்கு ஒன்றிலும் தீர்ப்பு ஹரிக்கு எதிராக அமைந்துவிட்டதால், அவர் பிரித்தானியா வர வாய்ப்பில்லை என்கிறார்.
தனது மனைவி பிள்ளைகளை பிரித்தானியா அழைத்துவருவது பாதுகாப்பானதல்ல என தான் கருதுவதாக ஹரி ஏற்கனவே தெரிவித்துள்ளார். இப்போது மக்கள் கவனமெல்லாம் மன்னர் மீதும் இளவரசி கேட் மீதும் இருக்கும் நிலையில், ராஜ குடும்பத்துக்கும் ஹரி மேகன் தம்பதியருக்குமிடையிலான பிரிவுதான் வலுப்படும் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் எஸ்தர்.