;
Athirady Tamil News

டெங்கு நோய் கட்டுப்பாட்டுக் கூட்டம்

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தலைமையில் இன்றைய தினம் (04.09.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு ஓரளவு சீரகவுள்ளதாகவும், தொடர்ச்சியான கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்து, அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றியதுடன் முன்னேச்சரிக்கை மற்றும் தடுக்கும் வழிவகைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார் கள்.

மேலும் இக் கூட்டத்தில்
முன்னெச்சரிக்கையாக டெங்கு நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1.இம் மாதம் – செப்டம்பர் 08 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதிக்கிடையில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு கூட்டத்தினையும், கிராம அலுவலர் தலைமையில் கிராம மட்ட டெங்கு நோய் கட்டுப்பாட்டு கூட்டத்தினையும் நடாத்துதல்.

2 டெங்கு விழிப்புணர்வு வாரத்தினை இம் மாதம் – செப்டம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் 14 ஆம் திகதி வணக்கஸ்தலங்களிலும், 15 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பாடசாலைகளிலும் சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3.விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினங்களான இம் மாதம் – செப்டம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிகளில் – சுத்திகரிப்பு சிரமதான வேலைகளை வீடுகள், பாடசாலைகள், அரச தனியார் நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்ளுதல். இலங்கையில் மலேசியா நோய் கட்டுப்பாட்டில் உள்ளது எனினும் குறிப்பாக தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பது தொடர்பில் விழிப்புணர்வின் அவசியம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

4.திண்மக் கழிவகற்றலில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதை உறுதிப்படுத்தல்.

இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பொலிஸ், கடற்படை மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.