;
Athirady Tamil News

இமாசல பிரதேசம்: நிலச்சரிவில் பஸ் சிக்கி 18 பேர் பலி; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

0

இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துதா துணை மண்டலத்திற்கு உட்பட்ட பலூர்காட் பகுதியில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அந்த பகுதியானது, தொடர் மழையால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மோசமடைந்து இருந்தது.

இந்நிலையில், மாலை 6.30 மணியளவில் அந்த பஸ் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கொண்டது. இதில், பஸ் முழுவதும் கற்கள் மற்றும் மண் விழுந்தது. இதனால், ஒரு போர்வை போன்று மண்ணால் பஸ் மூடப்பட்டது. இதில், சிக்கி 18 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 3 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸ் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த மலையே இடிந்து பஸ் மீது விழுந்தது என அதனை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறினார்.

முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கு மற்றும் துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் விபத்துக்கு இரங்கல் தெரிவித்தனர். முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங், நிவாரண பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விபத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் என்னுடைய நினைவுகள் உள்ளன. காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என அதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.