;
Athirady Tamil News

கல்வியில் எந்த பிள்ளையும் புறக்கணிக்கப்படக்கூடாது பிரதமர் சுட்டிக்காட்டு

0

எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதுமே அரசாங்கத்தின் நம்பிக்கை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கு நுழையும் அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வி அமைச்சர் என்ற ரீதியில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பிள்ளையினதும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்களை மிகவும் முக்கியமாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை செல்லும் முதல் நாள் எமது அன்புக்குரிய பிள்ளைகளின் வாழ்க்கையில் பசுமையானதொரு நினைவாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அந்த நோக்கத்தை நனவாக்கும் வகையில், பாடசாலைப் பருவத்தை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் சுதந்திரமாகக் கழிப்பதற்கு ஏற்றவாறு பாடசாலைச் சூழலையும், கற்றல் – கற்பித்தல் செயல்முறையையும் மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு நாம் பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம்.

நீங்கள் சுமந்து வரும் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நாம் முயற்சிப்பது, நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்களில் எவ்விதக் குறைபாடும் ஏற்படாத வகையில், எதிர்கால உலகிற்குப் பொருத்தமானவர்களாக உங்களை ஒரு முழுமையான பிரஜையாக உருவாக்குவதற்காகவே ஆகும்.

அன்புக்குரிய பெற்றோர்களே, ஒரு வளமான நாட்டில் உங்கள் பிள்ளைக்கு ஒரு வளமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி, அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலையைக் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதற்கமைய, ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம்.

எமது இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகொள்வதற்கு உங்கள் அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை என நாம் கருதுகிறோம்.

நெகிழ்வுத்தன்மை மிக்க சிநேகபூர்வமான அணுகுமுறையுடன் அந்த நேர்மறையான வழிகாட்டல்களையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, ஓடி ஆடி விளையாடியவாறு வளரும் உங்கள் பிள்ளைகளின் அனுபவங்களைச் செயல்திறன் மிக்க, அர்த்தமுள்ளவையாக மாற்றி, அவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம்.

அன்புக்குரிய பிள்ளைகளே, தாயின் மடியிலிருந்து விலகி, ஆசிரியர் எனும் பெற்றோரின் அரவணைப்புக்குள் வரும் உங்கள் அனைவரதும் எதிர்காலம் எல்லா விதத்திலும் வெற்றிபெற வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.