;
Athirady Tamil News

சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம்

0

மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் டேங் சீ லுக் என்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ரூ. 9.2 லட்சம் அபராதமாக விதித்துள்ளது.

சாப்பிட்ட எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் டேங் சீ லுக், கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மூன்று சிறுவர்கள் KFC வாங்கிய சிக்கனை சாப்பிட்டு விட்டு, மீதமுள்ள எலும்பு துண்டுகளை வீணடிக்க விரும்பாமல் அதை சோறுடன் கலந்து அதனை ஆதரவற்ற முதியோர் ஒருவருக்கு வழங்குகின்றனர்.

அந்த வீடியோவில், “நாம் ஒன்று ஒரு நல்ல காரியம் செய்ய போகிறோம்” என்ற பின்னணி குரலும் இடம்பெற்றுள்ளது.

டேங் சீ லுக் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசுபொருளாக மாறியதோடு, டேங் சீ லுக் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

டேங் சீ லுக் செய்தது தர்மம் இல்லை என்றும், இணையத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் ஒரு ஆதரவற்ற முதியவரின் வறுமையை சீண்டும் கொடும் செயல் என்று இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிமன்ற தண்டனை
விசாரணையின் இறுதியில், தன்னுடைய மோசமான செயலுக்காக டேங் சீ லுக் மன்னிப்பு கோரினார்.

இருப்பினும், இது போன்ற செயல்கள் தொடர கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிமன்றம், டேங் சீ லுக்-விற்கு ரூ. 9.2 லட்சம் அபராதமாக விதித்துள்ளது.

தீர்ப்பு வெளியான உடனே இந்த அபராத தொகையை டேங் சீ லுக் செலுத்தியதாக தெரிகிறது.

மேலும், இணையத்தில் அந்த வீடியோவை நீக்கியுள்ள டேங் சீ லுக், இந்த சம்பவத்திற்காக மிகவும் மன வருந்துகிறேன். இனி என்னை முழுமையாக மாற்றிக் கொண்டு மீண்டும் மக்கள் முன் தோன்றுவேன் என்று டேங் சீ லுக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.