அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் பயனாளர்களின் பணத்தை திருடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஸ்வெசும பயனாளர்களைப் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளும் மோசடியாளர்கள், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்துகின்றனர்.
நலன்புரி நன்மைகள் சபை
பயனாளர்களின் விபரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறியோ அல்லது வேறு ஏதேனும் போலியான காரணங்களைக் குறிப்பிட்டோ, பயனாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணத்தை இந்த மோசடியாளர்கள் கோரி வருகின்றனர்.
இந்தத் தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் சபையின் அனுமதியோ அல்லது அறிவோ இன்றி முன்னெடுக்கப்படும் முற்றிலும் சட்டவிரோதமான மோசடிச் செயல்களாகும்.
மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சபை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, இவ்வாறான போலி அழைப்புகள் வந்தால், உடனடியாக அது குறித்துப் பயனாளிக்கு மிக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இத்தகைய அழைப்புகளைப் பெற்ற பயனாளர்கள், அந்தந்த காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய கள அதிகாரிகளும் கிராம மட்டங்களில் இது குறித்து தீவிரக் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
அஸ்வெசும பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களையோ, வங்கி விபரங்களையோ அல்லது பணத்தையோ அறியாத நபர்களுக்குத் தொலைபேசி வழியே வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.