;
Athirady Tamil News

இங்கிலாந்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட இலங்கையருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பகுதியில் உள்ள ‘ஹைஃபீல்ட் ஹவுஸ்’ புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் ஊழியர்களைத் தாக்கியதுடன், பொதுவெளியில் அநாகரீகமாகத் தன் உடலை வெளிப்படுத்திய இலங்கையர் ஒருவரை போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

கடந்த 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது, தனது தொலைபேசி இயங்கவில்லை என்ற கோபத்தில் விடுதியின் வரவேற்பறைக்குச் சென்ற 38 வயதுடைய குறித்த நபர், அங்கு பணியாற்றிய ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, “நான் இலங்கையைச் சேர்ந்தவன், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறிய மனிதர்களான நீங்கள் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என இனரீதியான கருத்துக்களைத் தெரிவித்ததுடன், ஊழியர்களைத் தாக்கி அநாகரீகமான முறையில் தனது ஆடைகளை அவிழ்த்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஊழியர்களைத் தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளை குறித்த நபர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.

அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான சிசிடிவி (CCTV) ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழாம்,அவர் மீதான குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

தான் அநாகரீகமாக நடந்துகொண்டதை அவர் மறுக்கவில்லை என்றாலும், மற்றவர்களை அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அங்கிருந்த ஊழியர்கள் மிகுந்த அச்சமடைந்ததாகத் தெரிவித்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவருக்குத மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியும் வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.