;
Athirady Tamil News

மீண்டும் அந்த நரகத்திற்குச் செல்ல மாட்டேன்; அடம்பிடிக்கும் சுரேஷ் சலே!

0

நான் மீண்டும் அந்தத் தடுப்புக் காவல் கூடத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அந்த இடம் ஒரு நரகம் போன்றது. எனக்கு மரணமே பொருத்தமானது ” என அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலின் கீழ் இருந்த சுரேஷ் சலே, திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை
இந்த நிலையில், மருத்துவமனையில் சுரேஷ் சலே, தனது தனிப்பட்ட சட்டத்தரணியைச் சந்தித்த போதே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் சுரேஷ் சலேவிடம், தற்போதைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து அவரது சட்டத்தரணி விவரித்துள்ளார்.

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் சலேவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், சட்டத்தரணியின் வேண்டுகோளை முற்றாக நிராகரித்த சுரேஷ் சலே, தான் மீண்டும் சி.ஐ.டி-யின் தடுப்புக் காவல் கூடத்திற்குத் திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் தன் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் சலே குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும், மரணத்தை எதிர்கொள்ளவும் தான் தயார் என்றும் அவர் தனது சட்டத்தரணியிடம் குறிப்பிட்டுள்ளதாகச் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.