;
Athirady Tamil News

ஈரானிய தலைமை மதகுரு கமேனிக்கு ஜூலை 9 இறுதிச் சடங்கு!

0

கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், கமேனியின் குடும்பத்தினரும், அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராகப் போரில் களமிறங்கிய ஈரானின் புதிய தலைமை மதகுருவாக கொல்லப்பட்ட கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டார்.

கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரால், கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 37 ஆண்டுகளாக ஈரானின் தலைமை மதகுருவாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனிக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அவரது உடல் மஷாத் நகரத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ஈரானிய அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கமேனியின் இறுதிச் சடங்கு ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வரும் ஜூலை 4 ஆம் தேதியும், அந்நாட்டின் புனித நகரமாகக் கருதப்படும் கோமில் வரும் ஜூலை 7 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரும் நாள்களில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கமேனியின் இறுதிச் சடங்குப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.