நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி விசாரணை!
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய விவகாரம் ஒன்றில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் இவ்வாறு பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை: இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழுவினர் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மர்ம மரணம் – இரு கோணங்களில் விசாரணை: குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில், அவர் ஏற்கனவே உட்கொண்ட போதைப்பொருள் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது பொலிஸாரின் கடுமையான சித்திரவதை மற்றும் தாக்குதல்களினால் இந்த மரணம் சம்பவித்ததா? என்ற இருவேறு கோணங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும், பொலிஸ் உயர்மட்டத்தினரும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.