சாய்ந்தமருதில் விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு – தேசிய காயம் தடுப்பு வாரத்தை முன்னிட்டு வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சி
சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 11வது தேசிய காயம் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருதில் பொதுமக்களுக்கான விசேட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.
2026 ஜூலை 06 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி ‘தேசிய காயம் தடுப்பு வாரமாக’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதலாம் நாளான இன்று ‘சாலைப் பாதுகாப்பு நாள்’ (Road Safety Day) அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) வைத்தியர் ஜே. மதன் வழிகாட்டலின் கீழ், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை சாய்ந்தமருது பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாய்ந்தமருது பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து வீதியால் பயணித்த சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்குப் பாதுகாப்பு ஆலோசனைகளை துண்டுப்பிரசுரங்கள் மற்றும் நேரடி அறிவுறுத்தல்கள் வழங்கினர்.
இதன்போது, வீதிப் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம், வாகன சாரதிகள் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவதன் முக்கியத்துவம், பாதுகாப்பான வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதசாரிகள் வீதியைக் கடக்கும்போது அவதானிக்க வேண்டிய விபரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
திடீர் விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைத்து, பாதுகாப்பானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என இதன்போது அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சாய்ந்தமருது பிரதான வீதியூடாகப் பயணித்த பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் இந்த விழிப்புணர்வு திட்டத்தினால் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
