இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா; 3,398 மாணவர்களுக்குப் பட்டங்கள்
video link- https://fromsmash.com/
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜூலை மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
மூன்று நாட்களுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள் உட்பட மொத்தமாக 3,398 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க 18ஆவது பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில், வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா (PC) முன்னிலையில் நடைபெறவுள்ளதுடன், விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகிறார்.
பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்நாளின் விசேட அம்சமாக மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு விசேட உரையை ஆற்றவுள்ளார்.
அமர்வுகளின் விபரங்கள்:
முதல் நாள் (ஜூலை 25): * 1ஆம் அமர்வு: பொறியியல் பீடம் (2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டுகள்) மற்றும் தொழில்நுட்பப் பீடம்.
2ஆம், 3ஆம் அமர்வுகள்: இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.
இரண்டாம் நாள் (ஜூலை 26): * 4ஆம் அமர்வு: பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.
5ஆம், 6ஆம் அமர்வுகள்: கலை மற்றும் கலாசார பீட மாணவர்கள்.
இறுதி நாள் (ஜூலை 27): * 7ஆம், 8ஆம் அமர்வுகள்: முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பட்டதாரிகள்.

9ஆம் அமர்வு: கலை மற்றும் கலாசாரப் பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் ஆகியவற்றின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள்.
இம்முறை பொறியியல், தொழில்நுட்பவியல், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த பெருமளவிலான மாணவர்கள் ஒரே தடவையில் பட்டம் பெறுவது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சியையும் உயர்கல்வித் துறைக்கான அதன் பெரும் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பட்டதாரிகள் தங்களுக்கான பட்டமளிப்பு அங்கி (Convocation Cloak), மாலை, அனுமதிச்சீட்டு மற்றும் தொடர்புடைய பொருட்களை ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தங்களது பீடங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.
பட்டமளிப்பு அங்கி மற்றும் மாலையைப் பெற்றுக்கொள்ளும் போது, மாணவர்கள் தங்களது மாணவர் பதிவேடு (Student Record) அல்லது மாணவர் அடையாள அட்டையுடன் (ID), முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட அறிவிப்புப் படிவத்தையும் (Clearance Form) சமர்ப்பிக்க வேண்டும். உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் படிவங்கள் இன்றி எவருக்கும் பட்டமளிப்பு பொருட்கள் வழங்கப்படமாட்டாது என பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேலும் அறிவித்துள்ளார்.