;
Athirady Tamil News

அலி காமேனி கொலைக்கு பழி தீர்ப்போம்; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் உச்ச தலைவர் மிரட்டல்

0

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி காமேனியின் 2வது மகன் மொஜ்தபா ஹூசேன் காமேனி பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை, அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் உடல் நேற்று முன் தினம் அடக்கம் செய்யப்பட்டது. 6 நாட்கள் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்குப்பின் அயதுல்லா அலி காமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஈரான் மிரட்டல்
இந்நிலையில், அயதுல்லா அலி காமேனியின் கொலைக்கு அமெரிக்கா, இஸ்ரேலை பழி தீர்ப்போம் என்று ஈரான் உச்ச தலைவரும், அலி காமேனியின் மகனுமான மொஜ்தபா காமேனி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தந்தையின் குற்றமற்ற இரத்தத்திற்கு பழிவாங்குவோம். பழிவாங்குதல் நமது தேசத்தின் விருப்பம். இது கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அலி காமேனியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ள நிகழ்வு மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.