மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் 31 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஏற்கனவே அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே காணப்படுபவர்கள். இவ்வாறான பாதுகாப்பற்ற சூழல் வந்து, அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
எனவே, தமிழ் அரசியல் கைதிகளுடைய பாதுகாப்பை இந்த அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்திலே, ஆனந்த சுதாகரனுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு இல்லை என்பது தொடர்பாக ஆனந்த சுதாகரன் உடைய தாயார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறைச்சாலையின் தலைமை அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.
ஆனந்த சுதாகரன் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலிலே, அவர் திடீரென்று கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டிருந்தார். ஆனால், அங்கே அவருக்குரிய பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அங்கே நிலவுவதாக தொடர்ச்சியாக அவருடைய தாயார் எங்களுக்கும் முறைப்பாடு செய்திருந்தார். .
எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலாலே, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு உயிர் அச்சுறுத்தல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
நாங்கள் தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலைக்காகச் செயற்படுபவர்களாக இருந்தாலும், நாங்கள் மனிதத்தை நேசிக்கிறோம்
சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை, வழமை போல விசாரணைகளை நடத்தி மூடி மறைக்காமல், கலவரங்கள் ஏற்பட்டு, அதிலே கைதிகள் இறந்ததாகக் கணக்குக் காட்டாமல், உண்மையான, விரிவான விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதே நேரத்திலே, நீண்ட காலமாக கொடிய துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எங்களுடைய தமிழ் அரசியல் கைதிகளை விடுபடுவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.