நகைக் கடையில் தங்கக் காப்பைத் திருடிய பெண்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றைக் திருடிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி (04.06.2026) குறித்த நகைக் கடைக்கு நகை கொள்வனவு செய்யச் சென்ற இப்பெண், அங்கிருந்த ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்கக் காப்பு ஒன்றை ஊழியர்களின் கண்ணில் படாமல் மிகவும் சூட்சுமமான முறையில் திருடி சென்றுள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
திருட்டுச் சம்பவம் தொடர்பாக நகைக் கடை உரிமையாளரினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டிற்கு அமைவாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் வைத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரிடமிருந்து திருடப்பட்ட ஒன்றரைப் பவுண் தங்கக் காப்பும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், மீட்கப்பட்ட தங்க நகையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.