இலங்கையின் வரலாற்றில் ஒரு மைல்கல்!
‘C lean Sri Lanka’ தேசியத் திட்டத்தின்கீழ், அரச அலுவலகங்களில் பொதுமக்களுக்கான சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 23 முக்கிய பொது விண்ணப்பப் படிவங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரித்து இணையதளத்தில் வெளியிடும் விசேட அங்குரார்ப்பண விழா அண்மையில் நடைபெற்றது.
ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய உத்தியோகபூர்வ மொழி வாரத்திற்கு இணைவாக, கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையிலுள்ள ‘நில மெதுர’ கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன ஆகியோரினால் www.moha.gov.lk இணையதளத்தின் ஊடாக இந்த மும்மொழி விண்ணப்பப் படிவங்கள் உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டு வைக்கப்பட்டன.இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தினால் (ICTA) பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘eForms System’ திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பின்வரும் விடயங்கள் தொடர்பான 23 பொது விண்ணப்பப் படிவங்கள் இவ்வாறு மும்மொழிகளிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
அரச காணிகளைப் பெற்றுக்கொள்ளல், சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள். பயிர்ச்சேத நிவாரணங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல் என்பன இதிலடங்கும். பிரதேச செயலாளர்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசேட குழுவொன்றினால் இவ்விண்ணப்பப் படிவங்கள் தொகுக்கப்பட்டுள்ளதோடு, அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் அவை மும்மொழிகளுக்கும் மிகத் துல்லியமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் உரையாற்றிய பொதுநிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, இந்த நடவடிக்கையானது நாட்டின் நாகரிகத்தின் அளவை அளவிடக்கூடிய ஒரு வரலாற்று மைல்கல் என்று வர்ணித்தார். மேலும் அவர் கூறியதாவது,
“ஒரு அரச அலுவலகத்திற்கு வந்து தனக்குத் தெரிந்த மொழியில் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும்போது, அந்தப் பிரஜை தான் இந்த நாட்டில் ஓரங்கட்டப்பட்ட, இரண்டாம் தரப் பிரஜை என்ற ஏமாற்ற உணர்வைப் பெறுகிறார். லியொனார்ட் வுல்ஃப்பின் ‘பெத்தேகம’ (கிராமத்துப்பத்து) புத்தகத்தில் வரும் சிலிந்துவின் வழக்கு விசாரணையைப் போல, மொழி தெரியாத காரணத்தினால் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ குடிமக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.”
தற்போது புழக்கத்திலுள்ள படிவங்களின் மொழியானது சிங்கள மக்களுக்குக் கூட சில வேளைகளில் புரிந்துகொள்வதற்கு கடினமாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சிரேஷ்ட பிரஜைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் கூட அவர்களால் தனித்து பூர்த்தி செய்ய முடியாதளவுக்குச் சிக்கலானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார். பிரித்தானிய ஆட்சிக்காலம் தொட்டு நிலவிவரும் இத்தகைய பழைய நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்றும், இந்த மாபெரும் நகர்வு இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்துப் பிரஜைகளும் சமமான இலங்கையர்களாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விசேட உரையொன்றை ஆற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, அமைதியான மற்றும் நிலையான இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஒவ்வொரு பிரஜையும் தனது சொந்த மொழியில் அரசாங்கத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
“நம் நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய மோதல்களுக்கு மொழிப் பிரச்சினையே பிரதான காரணியாக அமைந்தது. அரச நிறுவனமொன்றில் ஒரு கடமையை நிறைவேற்றிக் கொள்ளும்போது, தான் ஒரு இரண்டாம் தரப் பிரஜை என்ற உணர்வுக்குப் பதிலாக, ‘நாமனைவரும் சமம்’ என்ற உணர்வு ஏற்பட வேண்டும். 23 விண்ணப்பப் படிவங்களை மூன்று மொழிகளில் வழங்குவது சிலருக்கு சிறிய விடயமாகத் தோன்றலாம். ஆனால், இத்தகைய சிறிய படிகளே மாபெரும் சமூக மாற்றங்களுக்கு உறுதியான அடித்தளமாக அமைகின்றன.”
ஒரு பன்முக கலாசார மற்றும் பல்லின மதங்களைக் கொண்ட சமூகமாக, இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தாய்மொழியில் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படை சமூகப் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார். அரசு என்பது அனைவருக்கும் சொந்தமான ஒரு பொதுவான இல்லம் என்பதால், அதன் கதவுகள் அனைத்து மொழிகளுக்கும் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் எவரும் இந்த விண்ணப்பப் படிவங்களை www.moha.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து மிக இலகுவாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
அஷ்ரப் ஏ சமட்…