;
Athirady Tamil News

வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி

0
வடக்கு மாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘மாகாண விளையாட்டுப் போட்டி – 2026’ நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 29 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சேர்ந்த சுமார் 1,100 சிறுவர்கள் இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 9 இல்லங்களும், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து தலா 6 இல்லங்களும், வவுனியாவிலிருந்து 5 இல்லங்களும், முல்லைத்தீவிலிருந்து 3 இல்லங்களும் இதில் கலந்துகொண்டன.

இந்த மாகாண மட்டப் போட்டிகளுக்கு முன்னதாக, அந்தந்த மாவட்டங்களில் தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதனூடாகத் திறமையான வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்ட பின்னரே இந்த இறுதிப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

சிறுவர்களின் உடல் மற்றும் உளத் திறன்களை வெளிக்கொணரும் வகையில், 12, 14, 16, 18 மற்றும் 20 ஆகிய ஐந்து வயதுப் பிரிவுகளின் கீழ் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், தட்டெறிதல், குண்டெறிதல், அஞ்சல் ஓட்டம், கயிறு இழுத்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டான தாச்சி உள்ளிட்ட போட்டிகளில் சிறுவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குகொண்டு தமது அபாரத் திறமைகளை வெளிப்படுத்தினர்.  

நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் கலந்துகொண்டார்.

அத்துடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  ஜெயராணி பரமோதயன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின் ஆரம்பமாக, வாத்திய இசை முழங்க அதிதிகள் கௌரவமாக வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரதம செயலாளரால் தேசியக் கொடியும், சுகாதார அமைச்சின் செயலாளரால் மாகாணக் கொடியும், திணைக்கள ஆணையாளரால் ஒலிம்பிக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டன.  

சிறுவர் இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், மாகாண மட்டத்தில் இவ்வாறானதொரு பிரமாண்டமான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.