;
Athirady Tamil News

உக்ரைன் துறைமுகத்தில் கொடூர தாக்குதல் ; 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் பலி

0

தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசௌவின் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல், ஒடேசா துறைமுகத்தில் இருந்து சோளம் ஏற்றிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டுள்ளது.

அப்போது, கப்பலை இலக்காகக் கொண்டு ரஷ்யா மூன்று ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலையடுத்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, கப்பலில் பணியாற்றிய 17 மாலுமிகளில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும், 9 மாலுமிகள் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த கடல்வழி வழிகாட்டி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், காயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், வணிகக் கப்பல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

“சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உக்ரைன் இலக்காகக் கொண்டு தாக்கி வரும் நிலையில், உக்ரைனின் தானிய ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கப்பல்களை ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ‘எம்.வி. கோல்டன் லியோ’ கப்பல் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.