;
Athirady Tamil News

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை

0

உலகளவில் பல நாடுகள் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு சட்டரீதியான தடைகளை விதித்து வருகின்றன.

அவுஸ்திரேலியா 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோன்று பிரித்தானியாவும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குத் தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளது.

பிரான்ஸ், நோர்வே, இந்தோனேசியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பிற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன. சிறுவர்களைத் தடை செய்வதற்குப் பின்னால் உள்ள முதன்மை அச்சங்கள் மற்றும் காரணங்கள் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்.

அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் சுயமரியாதை குறைதல் என்பனவற்றை முதன்மைப் பாதிப்புகளாகக் கூறலாம்.

பாடசாலை மாணவர்களிடையே (குறிப்பாக மாணவிகளிடையே) அதிகரிக்கும் ‘சைபர்புல்லிங்’ இதில் முக்கியமானது.

சிறுவர்களின் வயதுக்கு மீறிய அல்லது வன்முறை சார்ந்த தகவல்கள் அவர்களை எளிதில் சென்றடைகின்றன.

செயலிகளின் ‘அல்காரிதம்’ (Algorithm) குழந்தைகள் அதிக நேரம் திரையை நோக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும் இந்த விவாதம் இப்போது அமைச்சு மட்டத்திலிருந்து பாராளுமன்றம் வரை தீவிரமடைந்துள்ளது.

12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் திரை நேரக் கட்டுப்பாடு (Screen time) கொண்டுவர யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நோக்கில் “குறைந்தபட்ச சமூக ஊடக வயதுச் சட்டமூலம்” (Social Media Minimum Age Bill) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ‘நிகழ்நிலை காப்புச் சட்டம்’ (Online Safety Act) சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்படவில்லை என்பதால், இதற்கெனத் தனியான ஒரு சட்டக் கட்டமைப்பு தேவையாகிறது.

தடைகள் உடனடியாகத் தீர்வைத் தருமா என்பதில் சில சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன,

VPN பயன்பாடு அல்லது தவறான பிறந்தநாளைக் குறிப்பிட்டு கணக்குத் தொடங்குதல் மூலம் சிறுவர்கள் தடைகளை எளிதில் கடந்துவிடுகின்றனர். அவுஸ்திரேலியாவின் தடையிலும் இத்தகைய சிக்கல்கள் எழுந்துள்ளன.

அண்மையில் நடந்த G7 உச்சிமாநாட்டில், சிறுவர்களை முழுமையாகத் தடை செய்வதை விட, சமூக ஊடகத் தளங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் ஆபத்தான அல்காரிதங்களைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

சமூக ஊடகங்கள் தொடர்புகொள்ளவும், கற்கவும், தங்களை வெளிப்படுத்தவும் உதவுகின்றன; எனவே தடையை விட “டிஜிட்டல் விழிப்புணர்வு” மற்றும் பாதுகாப்பான சூழலே அவசியம் எனப் பல இளைஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இலங்கை சர்வதேச அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றலாம்:

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடையும், 12- – 16 வயதுடையோருக்குப் பெற்றோரின் அனுமதி மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தலாம்.

சட்டப் பொறுப்பை முழுமையாகப் பெற்றோர்கள் மீது சுமத்தாமல், வயதுச் சரிபார்ப்பு முறைகளைச் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையை சமூக ஊடக நிறுவனங்கள் மீது சுமத்துவது.

பாடசாலை மட்டத்தில் இணையப் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் மற்றும் சமூக ஊடகங்களைச் சரியாகக் கையாளுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

சமூக ஊடகத் தடை என்பது வெறும் சட்டத்துடன் முடிந்துவிடுவதில்லை. திறம்படக் கண்காணிக்கும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் பெற்றோர்- ஆசிரியர் விழிப்புணர்வு ஆகியவை ஒருங்கிணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எஸ். அபிலாஷினி

திறந்த பல்கலைக்கழகம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.